பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில் 45 வீதமாக குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி நேற்று நாளேடுகளிலும், இணையத்திலும் விளம்பரங்களை கொடுத்திருந்தது.
இந்த விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தையை ஏந்திய தாயின் ஒளிப்படம், வன்னியில் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்தபோது, மருத்துவ உதவிக் கூடாரம் ஒன்றின் அருகே எடுக்கப்பட்டதாகும்.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி விளம்பரத்துக்காக பயன்படுத்திய இந்தப் படம் இலங்கையில் எடுக்கப்பட்டது என்று ஊடகங்களில் தகவல் பரவியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இந்தப் படம் கிறிஸ்தவ இணையம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தையினது படம் என்றும் ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்தப் படம் வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதும், மறைந்த ஊடகவியலாளர் தி.தவபாலன் எடுத்த படமே இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வன்னியில் நடந்த இறுதிப் போரின் போதான அவலம் இப்போது கூட வெளியே தெரியாதவாறு மறைப்பதில் சில ஊடகங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவது இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது.