பிரதமர் மோடி இந்தியரா? அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்தியரா என்பதை அவர் உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தலைவரான நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் கூட்டணிக்கட்சியான சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனாவில் பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதை விமர்சித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘பிரதமர் மோடி இந்தியாவில் குடியிருக்கும் இந்தியரா? அல்லது வெளிநாடுகளில் குடியிருக்கும் இந்தியரா(NRI)?’ என்பதை அவர் உடனடியாக முடிவு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மோடி பிரதமராக பதவியேற்றபோது பல திட்டங்களை அறிவித்தார். ஆனால், 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடையவில்லை.
மேலும், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் சேர்ப்பேன் என மோடி கூறியதும் இதுவரை நடக்கவில்லை.
இதற்கு எதிர்மாறாக நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வது தான் அதிகரித்து வருகிறது என அந்த கட்டுரையில் கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.