வழக்கமான ரேஷன் கார்டு முறையை மாற்றி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் துவங்கியது. ஆதார் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் அச்சடிக்கப்படும் இந்த கார்டுகள் பின்னர் மாநிலம் முழுவதும் பகுதி வாரியாக பிரித்து அனுப்பப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் பல்வேறு தவறுகள் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். தவறான முகவரி, பெயர் என எதாவது ஒரு பிரச்னை வந்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு சேலத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த சரோஜா என்பவருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சரோஜாவின் புகைப்படத்திற்கு பதில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரேஷன் கடை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டுள்ளார்.
அரசு இ-சேவை மையத்தில் சென்று இதனை சரி செய்து கொள்ளலாம் என அவருக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே அவர் சமாதானம் அடைந்துள்ளார்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து நடைபெற்று வரும் இது போன்ற குளறுபடிகளுக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.