இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, கடந்த17ம் திகதி இதே கோரிக்கையை வலியுறுத்தி சுவாமி மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 6 விதமான குற்றச்சாட்டுகளை கடிதத்தில் முன்வைத்து எழுதியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
பாஜக தலைமையிலான மத்திய அரசையும், அதன் கொள்கைகளையும் ரகுராம் ராஜன் பொது நிகழ்ச்சிகளில் விமர்சிப்பதாகவும், தேச நலன் கருதி அவரை உடனடியாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும், வட்டி விகிதத்தை உயர்த்தியது சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியது என்று ரகுராம் ராஜன் மீது குற்றம் சுமத்திய சுப்ரமணியன் சுவாமி,
வட்டி விகிதத்தை அதிக அளவில் உயர்த்துவதால், தவிர்க்க முடியாத விளைவுகள் ஏற்படும் என்று அறிந்தும் அவரது கொள்கை வேண்டும் என்றே இருந்ததாகவும், இது தேச விரோத நோக்கம் உடையதாகும் எனவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.