அணு உலையை ஆதரிக்கும் திரு. சரத்குமார் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்.
திரு சரத்குமார் அவர்களுக்கு ,
தங்களது பத்திரிகையான 'மீடியா வாய்ஸ்' ல் இடம் பெற்ற 'வன்முறை பாதையில் உதயாகுமார்' என்கிற கட்டுரை படித்தவுடன் தாங்கள் மிக தேர்ந்த அரசியல்வாதி என்பதை புரிந்துகொண்டேன் .
தாங்கள் புதிதாக கட்சி தொடங்கும்பொழுது அறிவித்த கட்சியின் கொள்கையை பார்த்து அதை வரவேற்றேன். அதில் முக்கியமானது, எல்லா அரசியல் தலைவர்களிடம் நட்பு போற்றுவது , சமயம் வரும்பொழுது ஒரே மேடையில் தோன்ற வைப்பது (முன்னாள் , இந்நாள் முதல்வர்கள் ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லை ) இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பீர்கள் என நினைத்தது உண்டு.
தாங்கள் படித்தவர், பத்திரிக்கை துறையில் இருந்தவர், கலைத்துறையில் தங்களது திறமையில் முன்னேறியவர் என்ற
எதிர்பார்ப்பில், சமுக பொறுப்போடு தாங்கள் ஏதாவது சிந்தித்து சாதிப்பீர்கள் என நினைத்து ஏமாந்து போனர்வர்களின் நானும்
ஒருவன் .
நீங்கள், உதயகுமாரை கேள்வி கேள்ளுங்கள், கேட்பது உங்கள் உரிமை , பதில் சொல்லுவது உதயகுமாரின் கடமை. அதேபோல் எனக்கும் உங்களிடம் சில கேள்விகள் உள்ளன,
நீங்கள் முன்பு எதன் அடிப்படையில் அணு உலைகளை எதிர்த்தீர்கள் ?
போரட்ட குழுவுடன் பிரதமரை சந்தித்தது ஏன் ?
தங்களுக்கு உதயகுமார் தான் பிரச்சனையா, அல்லது இடிந்த கரையா ? உதய குமார் பணம் பெற்றார் என்னும் குற்றச்சாட்டு தான் பிரச்சனையா ,அல்லது அணு உலை போராட்டமே உங்களுக்கு பிரச்சனையா ?
உதயகுமார், போரட்டத்திற்கு பணம் வசூல் செய்கிறார் என குற்றச்சாட்டு வைக்கும் நீங்கள், இராவணன் மசாலா நிறுவனர், திரு இராவணன் அவர்களிடம் பணம் வசூல் செய்து ஏன் நீங்கள் தேர்தலில் சீட்டு கொடுக்கிறேன் என்று ருபாய் 20 லட்சம் செலவு செய்ய வைத்தீர்கள் ?
இடிந்த கரை என்ற ஊர் தான் உங்களுக்கு பிரச்சனையா? நீங்கள் எப்பொழுதாவது அங்கு சென்றது உண்டா?
தாங்கள் போராட்ட குழுவை ஆதரிக்கும் பொழுது, மிக அருகில் இருக்கும் கன்னியாகுமரியில் இருந்து கொண்டே, இதோ அதோ என
போக்கு காட்டியது ஏன் ?
தாங்கள் அங்கு சென்றிந்தால் அவர்கள் அந்நியர்களுக்கு கொடுக்கும் விருந்தோம்பல் எப்படிபட்டது என தெரிந்து இருக்கும்.
உதயகுமார், அவர்களை பற்றி அணு உலை ஆதரவாளர்கள் வைக்கும் குற்றச்சாட்டு அவர் 74 கோடி பெற்றுள்ளார் என்பது தான். அவர் 740 கோடி பெற்றிருந்தாலும் எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை.அணுஉலை எதிர்ப்பாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் உதயகுமாருக்காக போராடவில்லை. எங்களுக்காகவும் உங்களுக்காகவும் தான் அணு உலை வேண்டாம் என போராடுகிறார்கள்.
நீங்கள், அணு உலை போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் , நாங்கள் உங்கள் ஊர் , குடும்பம் , தொழில் பற்றி எங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை .
அணு உலை மின்சாரம் வேண்டும் என கூறி தாங்கள் கோவையி லிருந்து கூடங்குளம் வரை பிரசாரம் செய்வதற்கு, உண்ணாவிரதம் இருப்பதற்கு ஜனநாயக நாட்டில் தங்களுக்கு எவ்வாறு உரிமை உள்ளதோ , அதே போல் அவர்களுக்கும் போராடுவதற்கு முழு உரிமை உண்டு. கூடங்குளத்தில் மக்கள் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராடும் பொழுது போராட்டக் குழுவினர் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தனர்.
ஆனால் நீங்களோ டி.எம்.பி பங்கு பிரச்சனையில், தங்களது ஆதரவாளர்களை சென்னைக்கு வரவழைத்த நீங்கள் ,போலீஸ் தடியடி நடத்திய பொழுது எங்கு சென்றீர்கள்? உங்கள் மீது ஒரு சிறு துரும்பாவது பட்டு இருக்குமா?
ஜப்பானை பார், ஜெர்மணியை பார் என எல்லாவற்றிலும் உதாரணத்திற்கு எடுத்துகொள்ளும் நாம், ஜப்பான் அணு உலை
மூடுவதை, முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளாதது ஏன் ?
அணு உலைக்கு எதிராக இங்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் படித்தவர்கள் மத்தியிலே பலத்த எதிர்ப்பு உள்ளது .
அங்கும் போராட்டக் குழு அமைத்து அணு உலைக்கு எதிராக போராடி கொண்டு இருக்கிறார்கள். அணு மின் நிலையம் வாசல் வரை சென்று மக்கள் முற்றுகை இடுகிறார்கள். அது அவர்களின் உரிமை என காவல் துறையும் அனுமதி கொடுக்கிறது. ஆனால் இங்கோ படித்தவர்கள் மத்தியில் தான் அணு உலைக்கு ஆதரவு இருக்கிறது. நாட்டுக்கு முன்னேற்றம் வேண்டும் என்றால், தொழில் துறை முன்னேற்றம் வேண்டும் , அதற்கு மின்சாரம் அவசியம் தான். அதற்கு அணு மின்சாரம் தான் தீர்வு என்றால் அது ஏற்கக்கூடியது அல்ல.
இந்த போராட்டத்தினால் தான் மின்சாரம் பற்றாகுறை என கூறும் அரசியல்வாதிகள் , மாற்று வழி பற்றி யோசித்தது உண்டா , அதற்க்கு நிதி ஒதுக்கியது உண்டா ? புதிய கண்டுபிடிப்புகளுக்கு இங்கு அங்கீகாரம் கிடையாது , நிதி ஒதுக்குவதும் கிடையாது.
உலகத்திலே பாதுகாப்பான பயணம் என்றால் ரயில் பயணம் தான் , அதிலே மனித தவறுகள் நடக்கும் பொழுது, விண்வெளி ஆராய்சியாளர் உயர் திரு , அப்துல் கலாம் அவர்களும், தேசிய பேரிடர் கழகமும் அணு உலை பாதுகபானது என கூறும் இவர்கள் , மனித தவறுகளுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என சொன்னால் சரியாக இருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் , சாத்தன்குளம் ஊராட்சியில் உள்ள அரசூர் கிராமத்தில் அதை சுற்றி உள்ள தேரி காட்டில் டாட்டா நிர்வாகம் , டைடானியம் ஆலை அமைக்க முயற்சிக்கும் பொழுது, எல்லா அரசியல் கட்சிகளும் (உங்கள் கட்சி உட்பட ) மக்கள் கருத்து கேட்கும் குழு அமைத்தது , மக்கள் கருத்து ஏற்ப தான் டைடானியம் ஆலை அமைக்க வேண்டும் என தாங்கள் அண்ணன் 'எர்ணஊர் நாராயணன் ' அவர்களின் தலைமையில் அப்பகுதி மக்களிடம் ஒரு கருத்து கேட்க்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. ஏன் நீங்கள் அதை கூடங்குளம் சுற்றி உள்ள பகுதியில் நடத்த கூடாது . அப்போது தூத்துக்குடி சுற்றி உள்ள பகுதியில் எல்லா அரசியல் கட்சிகளும் மக்களை வளைத்து வளைத்து கருத்து கேட்பு நிகழ்ச்சி நடத்தினார்கள் .
அந்தோ பரிதாபம் கூடங்குளம் சுற்றி உள்ள பகுதியில் எந்த அரசியல் கட்சிகளும் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடத்த வில்லை அல்லது நடத்த தயாரில்லையோ என தெரிய வில்லை .
நீங்கள் ஏன் இப்பொழுது அணு மின்சாரத்திற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள் என எப்பொழுதும் கேட்கமாட்டேன், உங்களுக்கு அதற்கான 'கோடி' காரணங்கள் இருக்கலாம் !
நன்றி
சீனிவாஸ் திவாரி