ரசிகர்களுக்கு விஷம் ஏற்றும் முருகதாஸின் 'துப்பாக்கி'
துப்பாக்கி படத்தின் இறுதியில் இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பணம் (Dedicated to the Indian Army) என்று போடுகிறார்கள். படம் முழுக்க இந்திய ராணுவத்தின் துன்பங்கள், சாகசங்கள், அவர்கள் நமக்காக படும் பாடுகள் என்று ரசிகர்களுக்கு தேசபக்தியை ஏற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
எந்த உணர்வுமற்ற ஒரு சராசரி மனிதனாக துப்பாக்கியை ரசிக்கலாம்தான். ஆனால், உணர்வுள்ள தமிழனாக மட்டுமல்ல இந்திய துணைக் கண்டத்தின் அங்கங்களாக இருக்கும் காஷ்மீர் மக்கள், வட-கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், சிகப்பு வழித் தடம் (Red corridor) என்று சொல்லப்படும் நக்சலைட்டுகள் இயங்கும் மாநிலங்களின் குடிமக்கள் ஆகியோரின் சார்பாக இந்தப் படம் ஊட்டும் ராணுவத்தின் ஊடான தேசபக்தி உணர்வை நாம் ஆட்சேபித்தே தீர வேண்டியிருக்கிறது.
“இந்த 40 நாட்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புகிற நீ அங்கே பாலைவனத்தில் ஒரு சிறிய குடில் அமைத்து தூக்கம் இல்லாமல் சின்ன விளக்கு வெளிச்சத்தில் இந்த விடுமுறைகால நினைவுகளோடு, உறவுகளை எல்லாம் விட்டுவிட்டு அங்கேபோய் கஷ்டப்படப் போகிறாயே” என்று விஜயிடம் பேசுகிறது ஒரு கதாப்பாத்திரம். விடுமுறை முடிந்து ராணுவ வீரர்கள் பணிக்கு திரும்பும்போது ரயில் ஏறுகையில் உறவினர்கள் குழந்தைகள் என்று கண்கலங்குவதாக காட்டி ராணுவ வீரர்களின் ‘தியாகத்தை’ நமக்கு உணர்த்துகிறார்கள்.
ராணுவ வீரர்கள் படுகிற கஷ்டங்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதே சமயம் பரந்துப்பட்ட அளவில் அவர்கள் நாடு முழுக்க அரங்கேற்றி வரும் அத்துமீறல்களை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே முடியாது.
ராணுவ சிறப்பு சட்டம் (Armed Forces Special Power Act) அமலில் உள்ள காஷ்மீரிலும் மணிப்பூரிலும் மக்கள் அடிமைகளாக நடத்தப்படும் கொடுமை, தெருவில் போவோர் வருவோரை எல்லாம் சந்தேகக் கண்ணோடு சோதித்துப் பார்க்கும் அசௌகரியம், ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்படும் அப்பாவி இளைஞர்கள் என்று மனித உரிமை மீறல்களின் எல்லைக்கே சென்றும் எந்தவித விசாரணை வளையத்துக்குள்ளும் அகப்படாத இந்த ராணுவத்தை நாம் எப்படி மெச்ச முடியும்?
தமிழகத்தில் மட்டும் என்ன கிழிகிறது? சுண்டக்காய் நாடான இலங்கை நூற்றுக்கணக்கான நம் மீனவர்களை சுட்டு வீழ்த்தியப் பின்னரும்கூட இந்திய ராணுவ என்ன செய்து கொண்டிருக்கிறது? தம் குடிமகன் ஒருவனுக்கு பிறநாட்டின் ராணுவத்தால் ஆபத்தென்றால் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆட வேண்டும் என்ற அளவிலாவது இந்த ராணுவம் என்ன செய்தது? அல்லது ராணுவ அமைச்சகம்தான் என்ன செய்தது?
இப்படிப்பட்ட இந்திய ராணுவத்தின் வீரச் செயல்களை போய் ராமேஸ்வரம் மீனவர்களிடம் சொல்லிப்பார்த்தால் தெரியும் இவர்களின் யோக்கியதை.
இந்த லட்சணத்தில், இலங்கையில் இருந்து ராணுவ வீரர்களை இங்கே அழைத்துவந்து அவர்களுக்கு பயிற்சி வேறு தருகிறது இந்திய ராணுவம். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பினால், நாங்கள் வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்று பயிற்சி தருகிறோம் என்கிறார்கள். கேவலம்!
அடுத்தது, இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதிகளாகவே காட்டும் அயோக்கியத்தனம் இந்தப் படத்திலும் இருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளை காட்டிலும் பல மடங்கு ஆபத்தான மத அடிப்படைவாதிகள் உள்ள ஒரு நாட்டில், அடுத்து ஆட்சிக்கு வரத் துடிக்கும் ஒரு நாட்டில், சிறுபான்மை மக்களை ஒருவித அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படிப்பட்ட படங்கள் அடிக்கடி வருகின்றன.
ஆஹா நம் நாட்டின் ராணுவத்தை குறை சொல்கிறாயா? இது சரியா? என்று வறட்டு தேசியவாதம் பேச வேண்டாம். மக்களுக்காகத்தான் அரசு, அந்த மக்களை பாதுகாக்கத்தான் ராணுவம். ஆனால், இந்திய நாட்டின் அரசு இயந்திரமே மக்களுக்கு எதிராக இயங்குகிற போது அரசு உத்தரவுப்படி இயங்குகிற ராணுவமும் அப்படிதானே இருக்கும்.
காஷ்மீரையும் மணிப்பூரையும் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பதற்காக அங்கே முகாமிட்டு இருப்பதாக சொல்லும் ராணுவம் உண்மையிலேயே அந்த மக்களை பாதுகாக்கிறதா என்று அந்த மாநிலங்களின் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திப் பார்த்தால் தெரியும். ராணுவம் அங்கேயே இருக்க வேண்டும் என்கிறார்களா அல்லது உடனடியாக வெளியேற வேண்டும் என்கிறார்களா என்று? சொந்த நாட்டு மக்களையே வலுக்கட்டாயமாக நிரந்தரமாக நசுக்கி வைத்திருக்கும் ராணுவத்தின் வீரத்தை இந்த திரைப்படத்தை பார்த்து நாங்கள் பூரித்து நிற்க வேண்டும் என்று இயக்குனர் முருகதாஸ் கருதினால், அது தமிழக மக்களிடையே எந்த பெரிய கருத்தியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று உறுதியாக சொல்லலாம். வெறும் வணிக ரீதியாக வேண்டுமானால் இந்த படம் வெற்றி பெறும்.
முருகதாஸ் – தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு தமிழன் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், சிந்தனையில் ஆபத்தான கலப்படம் இருக்கிறது. இதை முகருதாஸின் முந்தைய படமான 7ஆம் அறிவிலேயே உணர முடிந்தது. அந்த படத்தில் சமூக நீதிக்கு எதிரான கருத்துகள் இருந்தன. இப்போது, இந்த துப்பாக்கி மூலமாக இந்திய தேசிய உணர்வு ரசிகர்களிடையே திணிக்கப்படுகிறது.
முருகதாஸ் – தெரிந்தே செய்கிறாரா? அல்லது அறியாமையால் செய்கிறாரா? தெரியவில்லை. ஆனால், அவர் செய்வது ஆபத்தானது!
நன்றி - சீனிவாசன் மாணிக்கம்