பொதுவாக இந்தியாவில் மையப் படுத்தப்படும் ஆங்கிலப் படம் என்றாலே இந்தியாவில் ஹிந்தி மொழி தான் பேசப்படுகிறது என்ற பொய்யை உலகிற்கு சொல்வார்கள்.
லைப் ஆப் பை என்ற ஆங்கிலப் படம் இந்தப் பொய்யை உடைத்துள்ளது.
இந்தியாவில் தமிழ் மொழி பேசப்படுகிறது என்ற உண்மையை உலகிற்கு காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தின் முடிவு வரை ஆங்காங்கே தமிழ் வசனங்களை புகுத்தி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளனர். உலகின் தொன்மையான 'அம்மா அப்பா' என்ற வார்த்தைகள் இந்த ஆங்கிலப் படத்தில் பல இடங்களில் வருவது சிறப்பு.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் மொழி இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் ஒலிக்கச் செய்துள்ளனர். இப்படியான ஆங்கிலப் படத்தை நாம் வரவேற்க வேண்டும். படத்தின் இயக்குனருக்கு பாராட்டுகள்.
பாண்டிச்சேரியில் வசித்த குடும்பம் ஒன்று கனடாவுக்கு கப்பலில் இடம்பெயர்கிறது. கூடவே தங்களின் மிருகாட்சி சாலையில் இருந்த மிருகங்களும். இடையில் புயலில் கப்பல் மூழ்க படகில் பெற்றோர் சகோதரன் என குடும்பமே பலியாக pi மட்டும் ஒரு படகில் தப்பிக்கிறான். கூடவே ஒரு புலி, வரிக்குதிரை, குரங்கு, கழுதைப்புலி என மொத்தம் ஐந்து பேர் அந்த படகில் தஞ்சம் புக.. இறுதியில் யார் பிழைத்தது என்பது தான் கதை.
ஆனால் படகுக்குள் வந்த சில நிமிடத்திலேயே கழுதைப்புலி வரிக்குதிரையையும் குரங்கையும் அதை புலி வேட்டையாட இறுதியில் மிஞ்சும் Pi-க்கும் புலிக்கும் இடையே நடக்கும் போராட்டமும் கடலும் தான் படம். புலிக்கு பசித்தால் தான் காலி என்ற நிலையில் Pi என்னவெல்லாம் செய்து தன் உயிரைக் காப்பாற்றுகிறான் என்பதை பிரமிக்கும் வைகையில் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நிஜத்துக்கும் கிராஃபிக்ஸ்க்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். அவ்வளவு சிறப்பாக படைத்துள்ளனர் இடையில் கடவுள் குறித்த தத்துவ போதனைகள் எல்லாம் வெகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படம் முடிந்து வெளியே வரும்போது நீங்களே அந்த படகில் புலியுடன் பயணம் செய்தது போல் உணர்வீர்கள்.