Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீர்ப்பறவை திரை விமர்சனம்

இலங்கை கடற்படையால் தினம் தினம் நம் கடலோர தமிழக மக்கள் அனுபவிக்கும் இன்னல் வாழ்வையே நீர்ப்பறவை கதை கொண்டு செல்கிறது. நெய்தல் நிலத்தில் பெரும் அத்தியாயத்தினை கொண்டுவந்துள்ளார் இயக்குனர்.

இந்திய அரசால் மற(றை)க்கப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவனின் வாழ்க்கையை திரையில் காட்டிய பெருமை கலைஞரின் பேரனுக்கே சாரும். இவர் சம்பந்தப்படாவிட்டால் இப்படிப் பட்ட கதையை யாராவது தமிழில் எடுக்க முன்வருவார்களா என்றால் சந்தேகமே. இப்படி ஒரு தயாரிப்பாளர் மசாலா படம் எடுக்காமல் இப்படிப்பட்ட கதையை இயக்க சீனு ராமசாமி போன்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதால் இன்னும் பாராட்டுக்குரியவர் உதயநிதி ஸ்டாலின்.

கடலுக்கு மீன் பிடிக்க போன கணவன் திரும்பி வருவான்னு 25 வருஷங்களா காத்துக்கொண்டிருக்கும் நந்திதா தாஸின் வீட்டின் பின்புறத்துல எலும்புக்கூடு கிடைக்க, முன்னைய கதை ஆரம்பிக்கிறது . 

மீனவ தம்பதியரான பூ ராம், சரண்யாவின் மகன் தான் விஷ்ணு. ஊரே கரிச்சுக் கொட்டும் குடிகாரனாக விஷ்ணு.  இதில் விஷ்ணு ஈழத்து பையனாக வருகின்றான். கர்த்தருக்கு சேவை புரியும் சுனைனா. சுனைனா மேல் ஏற்படும் காதலால் குடி பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் விஷ்ணுவுக்கு, வேலை வெட்டி இல்லாதவன் என்று சுனைனாவை திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார் சுனைனாவின் பெரியம்மா. அதனால் தன் அப்பாவின் தொழிலான மீன் பிடி தொழிலுக்கு செல்ல நினைக்கும் விஷ்ணுவிற்கு ஏற்படும் தடங்கல்களை  அவற்றை அவர் சமாளிக்கிறாரா என்பதே மீதிக் கதை.

விஷ்ணு குடித்து விட்டுத்தான் நடிக்கிறாரோ என்று எண்ணும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.  விஷ்ணுவிற்கு கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்ப்பு காத்திருக்கிறது.

வம்சம் படத்திற்கு அப்புறம் மீண்டும் தன்னை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தியுள்ளார் சுனைனா. கர்த்தருக்கு சேவை செய்யும் கிறிஸ்தவப் பெண்ணாக அவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார். தமிழ் சினிமா சரியாக பாவிக்காமல் இருக்கும் ஒரு அற்புதமான நடிகை. இந்தப் படமாவது அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்கிறதா என்று பார்ப்போம். நிகழ்கால சுனைனாவாக நந்திதா தாஸ். 

இவரது நடிப்புத் திறமையை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இருந்தாலும் சுனைனாவே கொஞ்சம் மேக் அப் உதவியுடன் இவர் கதாபாத்திரத்தை செய்து இருக்கலாம். அனால் இந்த கதை வட இந்தியாவிற்கும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இயக்குனருக்கு இருந்த பட்சத்தால் தான் நந்திதாதாஸ் இந்தப் படத்துக்குள் வந்துள்ளார். 

தேசிய விருது வாங்கித்தந்த இயக்குனருடன் மீண்டும் இணைந்துள்ளார் சரண்யா. நடிப்பு பல்கலைக்கழகம் ஒன்று ஆரம்பிக்கும் அளவிற்கு நடிப்பில் அவ்வளவு முதிர்ச்சி தெரிகிறது. விஷ்ணுவின் அப்பாவாக பூ ராம் அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் வரும் சமுத்திரகனி, சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நிற்கின்ற கதாபாத்திரம். சுருக் என்று குத்துகிற சில வசனங்களைப் பேசுகிறார். படத்தின் நகைச்சுவைக்காக பயன்பட்டிருக்கிறார்கள் தம்பி ராமையாவும், விஷ்ணுவின் நண்பனாக வரும் பாண்டியும். 

என்.ஆர். ரகுநந்தன் இசையில் வைர வரிகளில் பாடல்களை எழுதியிருக்கிறார் வைரமுத்து. ‘பற பற…’ பாடலும், ‘தேவன் மகளே…’ பாடலும் ஏற்கனவே மக்களின் மனதில் பதிந்து விட்ட பாடல்கள் ஆகிவிட்டன. பற பற பாடல் அனைத்து வரிசைப் படுத்தலிலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவதில் இருந்தே அந்தப் பாடல் எவ்வளவு பிரபலம் ஆகியுள்ளது எனத் தெரிகிறது. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு கடலையும் கடல் சார்ந்த இடத்தையும் அழகாக காட்டியுள்ளது. 

வித்தியாசமான கதைக் களத்தை இந்த படத்திற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அழகாக சித்தரிக்கப்படிருக்கின்றன. ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இதுவே இயக்குனரின் திறமையை காட்டுகின்றது.

அவ்வப்போது பதிவுப்படம்  நினைவு வந்தாலும் திரைக்கதையின் அமைப்பாலும் இயக்கத்தின் நேர்த்தியாலும் அவற்றை மழுங்கடித்து விடுகிறார் சீனு ராமசாமி. இந்தப் படத்திற்கு தேசிய விருது எதுவும் கிடைக்காமல் போனால் நிச்சயம் கதைக் களமே காரணம் என்று அடித்துக் கூறலாம்.
[vuukle-powerbar-top]

Recent Post