பறையர்களுக்கு இறையிலி நிலம் வழங்கியவர் இராசராசச் சோழர்! - ம.செந்தமிழன்
இராஜராஜச் சோழர் காலம் குறித்த எனது கட்டுரையின் ஒரு பகுதி இது.
2010 ஆம் ஆண்டு, ‘இராசராசச் சோழர் – ஓர் தமிழிய ஆய்வு’ எனும் சிறு நூலாக அக்கட்டுரையின் தொகுப்பு வெளியானது. பொதுவாகவே, பிற்காலச் சோழர் காலம் குறித்து இன்று விவாதிக்கப்பட்டு வரும் கருத்துகள், சில ஆய்வாளர்களின் நூல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக திரு.நீலகண்ட சாஸ்திரியின் நூல்தான் பிற்காலச் சோழர்கள் குறித்த இன்றைய பல கருத்துகளுக்கு ஆதாரமாக உள்ளது.
’பிற்காலச் சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு ஒரு பெரும் வாழ்வு இருந்தது’ என்ற கருத்தைப் பரப்பும் நோக்கத்தை திரு.நீலகண்ட சாஸ்திரியின் அணுகுமுறையில் காண முடிகிறது. தமிழகத்தில் பிராமணர்களுக்கென நீண்ட நெடிய வரலாறு இருப்பதாகவும், அந்த வரலாறும் மதிப்பும் மரியாதையும் மிக்க வரலாறுதான் என்பதாகவுமே, பிராமணிய சார்பு ஆய்வுகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளை அப்படியே பின்பற்றியதன் விளைவுகளில் ஒன்றாக, ’தமிழர்கள் வரலாறு பிராமணர்களுக்கு அடிமைப்பட்ட வரலாறுதான்’ என்ற நம்பிக்கை கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டது.
எனது கட்டுரைகள், மூலச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஏதேனும் ஓர் ஆய்வாளரது கருத்துகளைச் சான்றாகக் காட்டினாலும், அவரது ஆய்வுகள் மூலச் சான்றுகளின் அடிப்படையிலானவையா அல்லது அவரது ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவையா எனப் பிரித்தறிந்து எழுதப்பட்டுள்ள கட்டுரை இது.
மூலச் சான்றுகள் என்பவை, கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற வரலாற்றின் சமகாலச் சான்றுகள்.
அந்த வகையில் சில கல்வெட்டுச் சான்றுகளைக் கண்போம்.
“உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதானமாகச் சோழமண்டலத்து புறமண்டலங்
களிலும் உடையார் ஸ்ரீ இராஜராஜதேவர்
குடுத்த ஊர்களில், ஊர்நத்தமும் ஸ்ரீ
கோயில்களும் குளங்களும்ஊடறுத்துப்போன வாய்க்கால்களும்
பறைச்சேரியும் கம்மாணசேரியுஞ்
சுடுகாடும் உள்ளிட்டு
இறைஇலி நிலங்களும்...’
(இராஜராஜேச்சரம்,
முனைவர் குடவாயில்
பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)
தஞ்சைப்பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேற்கண்ட கல்வெட்டும் ஒன்று. இக் கல்வெட்டு கூறும் சேதி, ’இராசராச சோழன் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்களாகக் கொடுத்த ஊர்களில் பறைச்சேரியும் கம்மாள சேரியும் உண்டு. மேலும் இந்தச் சேரிகளுக்கான நிலங்கள் இறையிலி நிலஙகள் ஆகும். அதாவது, பறைச் சேரி, கம்மாளச் சேரி மக்கள் அனுபவிக்கும் நிலங்களுக்கு அரசின் வரி விதிப்பு இல்லை.
அடுத்த கல்வெட்டு,
’சோழச் சருப்பேதிமங்கலம் ஆயிரம் பிராமணர்க்கு பங்கெழுதி கூறிட்டுக்கொள்கவென்று திருமுகப் பிரசாதஞ்செய்தருளி சம்கரித்து கூறிட்டமையில்.....இவ்வூர் பங்கெழுதி கரை பறித்து கையோலை வாங்கின...’
(சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் / முனைவர் மே.து.ராசுகுமார் /2004/ பக் 152, 153)
மேற்படி கல்வெட்டின் முழுமையான வரிகள் காட்டும் பொருள், பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களது முழு உரிமைக்கு விடப்படவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கரையோலை முறையில் இடம் மாற்றி வேறு இடம் தரப்பட்டது.’ இதன் மூலம் பிராமணர்கள் குறிப்பிட்ட நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடும் முறை தடுக்கப்பட்டது.
களப்பிரர், பல்லவர் காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் பிராமணர்களுக்கு முற்றும் முழுதான உரிமை உடையனவாக வழங்கப் பட்டன. மேலும் அந்த நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அங்கே அரசனின் ஆணை செல்லாது. அந்நிலங்களுக்காக பிராமணர்கள் வரி செலுத்தவும் தேவையில்லை. இந்த நிலையை மாற்றியது சோழர் காலம்.
அடுத்த சான்றைக் காண்போம்.
“சோழ நாட்டு வளமான விளைநிலங்களின் பெரும்பகுதி, பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட்டிருந்தது என்பது உண்மைக்கு மாறானதாகும். சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பிராமண ஊர்களாக இருந்திருக்கின்றன. இது 19.25% மட்டுமே. கோயில் மற்றும் பிராமணர் கொடை தொடர்பான பதிவுகளே கல்வெட்டுகளில் பெரிதும் இருக்கின்றன. எனவே, கோயில் கல்வெட்டுகளில் பதியப்படாத வேளாள ஊர்களையும் கணக்கில் கொண்டால், இந்த அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்” (மேலது நூல் / பக் 214,215)
என்கிறார் ஆய்வாளர் மே.து.ரா.
கொடை யளிக்கப்பட்ட மொத்த ஊர்கள் 1300ஐயும் கல்வெட்டுச் சாசனப்படி ஆய்ந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு இது.
பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேலும் ஒன்றைக் காண்போம்.
“கேரளாந்தகன் திருவாயில் மெய்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்காப்பாளர்” என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்தி நிற்கும் சேதி,
“தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சொத்துக்களை 118 ஊர்களில் ஊருக்கு ஒரு மெய்க்காப்பாளர் என்ற முறையில் நிர்வகித்து வந்தனர். இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த ஊர் மக்களுக்கே விடப்பட்டது. இக் கல்வெட்டை ஆய்ந்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பின் வருமாறு வியந்து உரைக்கிறார்;
“தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துகள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப் பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழ மண்டல ஊர்மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும் சிறந்த சான்றொன்று இருக்க முடியாது’ (இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)
இராசராசச் சோழர் குறித்த முக்கியமான வெளிநாட்டவர் ஆய்வுகளை மேற்கோள் காட்டும் ஆய்வாளர் பாமயன், “களப்பிரர், பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராமண ஆதிக்கப் பிரமதேய முறையை மாற்றி அமைத்துத் தமிழ்க் குலத்தவருக்கு நிலங்கள் வழங்கவே, கோயில்களைப் பொருளியல் மையங்களாக மாற்றினார் இராசராசன்” என்கிறார். ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கராசிமா, சோழர் காலத்தில் பிராமணர்களின் தனியார் நிலங்களும் பிரமதேயங்களும் கோயில்களுக்கு மாற்றப்பட்டன என்று கூறியுள்ளதைப் பாமயன் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். (வேளாண்மையை விரித்த வேந்தன் / பாமயன் / தமிழினி, 2010 அக்டோபர்)
இது மிக முக்கியமான பார்வை ஆகும். தனியார் சொத்துகள் வரம்பு மீறும்போதும் ஊழல் மிகும்போதும் அச்சொத்துகளை அரசுடைமை ஆக்கும் வழக்கம் இன்று உள்ளது. இதே போல் பிராமணரின் தனியார் சொத்துகளையும் பிரமதேய சொத்து களையும் கோயிலுக்கு மாற்றி விடுவதும் அரசுடைமையின் அக்கால வடிவம்தான்.
அடுத்து, வேறு ஒரு கல்வெட்டைக் காண்போம். இதுவும் அதே தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுதான். ஆனால், விஜயநகர அரசர் காலக் கல்வெட்டு.
இக்கல்வெட்டு, மகா மண்டலேசுவரன் திருமலை ராயனுடையது.’தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பிரமதேய கிராமங்கள் சிலவற்றை வரி இல்லாத நிலங்களாக மாற்றி ஆணை பிறப்பித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது’ ((இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)
இதன் பொருள் என்ன? விஜயநகர அரசர்கள் தஞ்சையை ஆளும் வரை, பிராமதேய கிராமங்கள் வரி செலுத்த வேண்டிய வையாகவே இருந்தன என்பதுதானே! விஜய நகர, நாயக்கர் அரசுகள் பிராமண அடிவருடி அரசுகள் என்பதை ஏறத்தாழ எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். இவ்வரசுகளே, பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின்னர் தமிழகத்தை ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி செய்தன.
களப்பிரர்கள் பற்றியும் தமிழகத்தில் உண்மைக்கு மாறான கருத்து நிலவுகிறது. கள்ளப்பிரர் காலம் பிராமண ஆதிக்கத்துக்கு எதிரானது எனப் பல நம்புகின்றனர். ஆனால், மூலச் சான்றுகள் இந்த நம்பிக்க்கைக்கு மாறான தகவல்களை வைத்துக் கொண்டுள்ளன.
இதைப் பற்றிய களப்பிரர் காலக் கல்வெட்டு ஒன்றைக் காண்போம். பூலாங்குறிச்சி கல்வெட்டு என்று அதற்குப் பெயர். அக்கல்வெட்டுகளின் சிலவரிகளைக் காணலாம்;
.....(ழவரும்) ரு...ங் கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருப் பிரம்ம தாயக்கி
....(ழமை)யும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப் கடைய வயலென்னும்
....புலத்தவன் விற்றுக் கொடுத்த புன்செ நிலனு
....துப் பிரமதாயத்துப் பிரமதாயக் கிழவரா(ன)
....வரு குடிகளையும்...டையாரும் பிரம்மதாய முடையாருந் நாடு காப்பாரும் புறங்காப்
-இக்கல்வெட்டுகள் வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் ஆகிய பிரமதேய கிராமங்களைப் பற்றிக் குறிப்பிடு கின்றன. இந்த பிரமதேய நிலங்களைப் பெற்றுக் கொண்ட பிராமணர்களைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்,’பிரமதேய கிழார்கள்’ என்கின்றன.
சில குறிப்புகள்:
’சேரி’ என்பது, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்ற இன்றைய கருத்துக்கும் வரலாற்றுக்கும் தொடர்பில்லை. ’சேரி’ என்றால், குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்ந்து வாழும் இடம் என்றுதான் பொருள். அந்தவகையில் ‘பறைச்சேரி, கம்மாளச் சேரி, பள்ளுச் சேரி’ மட்டுமல்ல, ‘பார்ப்பனச் சேரி’களும் சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் நிறையவே உண்டு. புகார்ப் பட்டிணத்தில் ‘யவனச் சேரி’கள் இருந்தன. ’யவனர்’ என்றால் கிரேக்கர்களைக் குறித்த சங்கத் தமிழ்ச் சொல்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் சொத்துகளை பிராமணர்கள் அனுபவித்தனர் என்றும் பொத்தாம் பொதுவாகப் பேசப்பட்டு வருகிறது. பின்வரும் பட்டியல் பெருவுடையார் கோயிலின் ஆக்கம் மற்றும் நிர்வாகக் குழுவினரை வரிசைப்படுத்துகிறது.
1. மாமன்னன் இராசராசன்
2. வீரசோழன் குஞ்சரமல்லன் எனும் ராசராசப் பெருந்தச்சன் எனும் தலைமைக் கட்டிடக் கலைஞர்.
3. மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)
4. இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)
5. மாமன்னனின் தமக்கை குந்தவைப் பிராட்டியார்.
6. சேனாதிபதி கிருஷ்ணன் இராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன்.
7. ஸ்ரீகாரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் (கோயிலின் நிர்வாக அதிகாரி)
8. ஈசான சிவபண்டிதர் எனும் இராஜகுரு
9. இராசேந்திர சோழன்
10. சைவ ஆசாரியார் பவனபிடாரன் (தலைமை குருக்கள்)
11. கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான்
ஆறாம் இடத்தில் குறிப்பிடப்படும் பிரம்மராயன் மட்டுமே, பிராமணர். கோயிலின் மதில் சுவரைக் கட்டுவிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கோயில் நிர்வாகத்தில் இவருக்கு எந்தப் பொறுப்பும் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. மேலும் இவர், இராசராசரின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்.
பெருவுடையார் கோயில் நிர்வாகம் தமிழ்க் குலத்தவர்கள் நிர்வாகத்தில் மட்டுமே இருந்தது. பவனபிடாரன் என்பவர் சிவனிய அறிவாளராக இருந்திருக்க வேண்டும். பிடாரன் என்றால், தேவாரம் பாடுவோரைக் குறித்தது. இவரே பெருவுடையார் கோயிலின் தலைமை குருக்கள்.
’பிராமணர் ஆதிக்கத்தில் கோயில் இருந்தது, சமஸ்கிருத மந்திரங்கள்தான் ஓதப்பட்டன’ என்பது போன்ற கதைகளைக் கல்வெட்டுகள் மறுக்கின்றன.
இராசராசச் சோழரின் அரச ஆலோசகர் ஈசான சிவ பண்டிதரும் தமிழ்க் குலத்தவர்தான். ஆகவே, ’பிராமணர்களின் சதி ஆலோசனைகளைக் கேட்டு சாதிக் கொடுமைகள் செய்தார் இராசராசர்’ எனும் கதைகளும் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளால் தூக்கி வீசப்படுகின்றன.
- செந்தமிழன் மணியரசன்