Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்திற்கு நான்கு நாட்கள் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு உச்சநீதி மன்றம் உத்தரவு



கர்நாடகா காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம்,  உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இடையே, காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகள் சார்பிலும்,உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, இரு மாநில முதல்வர்களும், சமீபத்தில் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. "தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது' என, கர்நாடகம் கைவிரித்து விட்டது. 

இது தொடர்பான விவரங்களை, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில்  தெரிவித்தது. இதையடுத்து, "இரு மாநில அரசுகளும், தங்களிடம் உள்ள தண்ணீர் இருப்பு, தண்ணீர் தேவை குறித்து, நம்பத் தகுந்த ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, உச்சநீதிமன்றம்,  த்தரவிட்டிருந்தது. இரு மாநில அரசுகளும், அறிக்கை தாக்கல் செய்தன. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் தலைமையிலான பெஞ்ச், காவிரியில் தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், காவிரி கண்காணிப்புக்குழு நாளையோ அல்லது நாளை மறுநாளோ கூட்டப்படவேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம்,  தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து காவிரி கண்காணிப்புக்குழுவின் அறிக்கையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
[vuukle-powerbar-top]

Recent Post