பாகிஸ்தானின் உதவியுடன் வவுனியாவில் முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டிக்கொடுக்கப்படவுள்ளது.
வட கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் கல்வி உட்கட்டமைப்பிற்கு முதற் தடவையாக உதவும் வகையில் வவுனியா சாளம்பைக்குளம் அல்-அக்சா மகாவித்தியாலயத்தில் 23 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்லை பாகிஸ்தான் தூதுவர் திருமதி சீமா இலாஹி பலோச் நாட்டி வைத்திருக்கின்றார்.
இந்த வைபவத்தில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.மூன்று மாடிகளுடன் சகல வசதிகளையும் கொண்டதாக அமையவுள்ள இந்தக் கட்டிடத்திற்கான நிதியுதவியை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பாகிஸ்தான் அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
சாளம்பைக்குளம் பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் அடிப்படை வசதிகளில்லாத போதிலும் கல்வியில் அதிக நாட்டமுடையவர்களாக இருந்ததாகவும் அவர்களுக்கு சிறிய அளவில் தாங்கள் உதவ முன்வந்திருப்பதாகவும் இந்த வைபவத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் தூதுவர் திருமதி சீமா இலாஹி பலோச் குறிப்பிட்டார்.
''நாட்டின் ஏனையப் பகுதியில் உள்ள தரமுள்ள பாடசாலையைப் போல இந்தப் பாடசாலையைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசுடனான பாகிஸ்தானின் இந்த உதவியை இங்குள்ள மக்கள் வரவேற்பார்கள் அதன் மூலம் நன்மையடைவார்கள் என்று நம்புகிறேன்'' என்றார் இலங்கைக்கான பாகிஸ்தானிய தூதுவர் குறி உள்ளார்.