நீதியரசர் கிருஷ்ணையரின் 98 ஆவது பிறந்த நாளை மரண தண்டனை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் சென்னை தியாகராய நகரில் இன்று சனிக்கிழமை மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். பல திரைப்பட கலைஞர்கள் இந்த விழாவிற்கு வந்து மரண தண்டனையை எதிர்த்து தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர் . திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ரோகினி மிக ஆழமாக மரண தண்டனையை எதிர்த்து கருத்தை பதிவு செய்தார். பாடகர் உன்னி கிருஷ்ணன், இசை இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோரும் வந்திருந்தனர்.
மும்பையில் இருந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய வழக்கறிஞர் யுக் மோகித் சௌத்ரி (பச்சை நிற சட்டை. மேடையில் பேசுபவர்) மிக சிறப்பாக மரண தண்டனையை பற்றி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:
மூன்று தமிழருக்காக (முருகன் சாந்தன் பேரறிவாளன்) இங்கு வந்துள்ள அனைவர்க்கும் ஒரு கேள்வி.
கசாபை தூக்கில் இடுவதற்கு முன் இப்படி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தால் உங்களில் எந்தனை பேர் கசாபின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்க இங்கு வந்திருப்பீர்கள் ?
அரங்கத்தில் சிலர் மட்டும் கையை உயர்த்தினார்கள். பின்பு நடிகை ரோகினி கையை உயர்த்தினார். பின்பு திரு. சௌதரி கூறினார். சிலர் மட்டும் கையை உயர்த்தி உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது . காரணம் குற்றவாளி தமிழனாக இருந்தாலும் , பஞ்சாபியாக இருந்தாலும் , பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை கூடாது என்பது தான் நமது நிலைப்பாடு. அது தீர்வும் அல்ல .
மரண தண்டனை கொடுப்பதால் நாம் அவருக்கு திருந்தும் வாய்ப்பை மறுக்கிறோம். கசாபை தூக்கில் போடாமல் இந்திய அரசு கசாபை ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தி காப்பாற்றி இருந்தால் இந்நேரேம் உலக அளவில் இந்திய நாடு மனித நேயத்தில் தலை நிமிர்ந்து இருக்கும்.
ஆனால் கசாபை தூக்கில் ஏற்றியதால் இந்திய அரசு ஒரு மனித நேயமற்ற அரசு என்பதை உறுதி செய்து விட்டது. யாருக்கும் தெரியாமல் அறிவிக்காமல் கசாபை தூக்கில் போட்டது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் , எந்த ஜனநாயக நாட்டிலும் நடக்காதது . கசாபின் குடும்பத்திற்கு கூட சொல்லவில்லை . இது எவ்வளவு பெரிய கொடூரம். இந்தியா நாடு தான் இப்போது குற்றவாளி என்று ஆணித்தரமாக திரு யுக் மோகித் சௌத்ரி தந்து கருத்தை பதிவு செய்தார். அரங்கத்தில் இருந்த அனைவரும் அவரின் பேச்சுக்கு கைதட்டி பாராட்டினர்.
மரண தண்டனை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் .