கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகள் கோலாருக்குக் கொண்டு செல்லப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு, வேறு தகுதியான இடம் கிடைக்கும் வரை அவை கூடங்குள அணு உலை வளாகத்திலேயே வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுஉலை வழக்கு நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அணுஉலை எதிர்ப்பாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அணு உலையில் இருந்து வெளியேறும் வெப்பநீர் மன்னார் வளைகுடா பகுதியின் கடல் உயிரியலை பாதிக்கும் எனத் தெரிவித்தார். ஆனால், இதுபற்றி அரசு எந்தவிதமான ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விபத்துக்களுக்கான இழப்புக்கு பொறுப்பேற்பது குறித்து இந்திய-ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் பிரசாந்த் பூஷன் கேட்டுக்கொண்டார். கடல்நீரை குடிநீராக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்றும் பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.