Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பூந்தமல்லி சிறப்பு முகாமில் பட்டினிப் போராட்டம் நடத்தும் பகீரதன் மயக்கம். அரசு நடவடிக்கை எடுக்குமா?


வழக்கு விசாரணையே இல்லாமல் 5 வருடங்களுக்கு மேலாக தம்மை சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து கடந்த 30 தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் பகீரதன் சிகிச்சை எதுவும் இன்றி மயங்கிய நிலையில் இருக்கிறார். 

இவர் கடந்த 5.3.2007 இலங்கைக்கு பொருட்கள் கடத்தியவர்களுக்கு பணம் கொடுத்தார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 8 மாதம் திருச்சி சிறையில் இருந்தார். பிணையில் வெளிவந்த இவரை சிறை வாசலிலேயே கைது செய்த கியூ பிரிவினர் செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைத்தனர். செங்கல்பட்டு சிறப்புமுகாமில் இவர் உட்பட பலர் தங்களை விடுதலை செய்யக்கோரி 2.2.2010 அன்று உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருந்தவர்கள் காவல்துறையினரை தாக்க முயன்றார்கள் என்று பொய்யான குற்றம் சுமத்தி இரவோடு இரவாக 200 காவல்துறையினர் முகாமிற்குள் நுழைந்து உண்ணாவிரதம் இருந்தவர்களின் கைகால்களை முறித்தனர். இந்த உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்த பகீரதன் உட்பட முக்கியமான 15 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 43 நாட்களுக்கு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இவர்களை மீண்டும் கியூ பிரிவினர் கைது செய்து பூந்தமல்லி முகாமில் அடைக்கப்பட்டனர்

2.2.2011 வெளியிலிருந்து வழக்கை நடத்திக்கொள்ளலாம் என்று இவர் விடுவிக்கப்பட்டார். வெளியில் வந்த பகீரதன் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தை பிறந்து அமைதியான முறையில் வாழ்ந்துவந்த இவரை வழக்கை முடிக்காமல் நாட்டைவிட்டு வெளியேற முயன்றார் என்று 4.7.2012 அன்று கைது செய்து மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். கடந்த ஆறு ஆண்டு காலத்தில் இவர் 5 ஆண்டுகள் சிறப்பு முகாமிலேயே கழித்துவருகிறார் என்பது வேதனைக்குரியது. இவர் மீது புதுக்கோட்டை கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் வழக்கு நீதிபதி இல்லாததால் இதுவரை வழக்கு விசாரணையே தொடங்கப்படவில்லை இந்த நீதிமன்றத்திற்கு எப்பொழுது நீதிபதி நியமிக்கப்பட்டு எப்பொழுது இவர் வழக்கு விசாரணை தொடங்கும் என்பது கேள்விக்குறிதான். இவரை தவிர இவருடன் கைது செய்யப்பட்ட மற்ற இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பகீரதனின் உடல் நிலை மோசமாகி வருகிறது. மயக்க நிலையில் உள்ளார். அதனால் அரசு உடனடியாக பகீரதனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

[vuukle-powerbar-top]

Recent Post