ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த தருஸ்மன் தலைமையிலான நிபுணர்குழு அறிக்கையை விடவும், பாரதூரமான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அவர், “கொழும்பிலுள்ள ஐ. நா. பணியகத்தின் மீது குற்றம் சுமத்தி இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானத்தை அமெரிக்கா தயாரித்து வருகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தருஸ்மன் தலைமையிலான ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை விடவும் பாரதூரமானதாக அமையும்.
அமெரிக்கா உள்ளிட்ட பல ஏகாதிபத்திய நாடுகள் இலங்கைக்கு எதிரான தவறான கருத்துக்களை சேகரித்து வருகின்றன.
இறுதிப்போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களைக் காப்பாற்றத் தவறியமை, அந்தக் காலகட்டத்தில் பான் கீ மூனை இலங்கைக்கு அழைக்காதமை, ஐ.நா அமைதிப்படையின் சேவையைப் பெறாதமை போன்றனவே ஐ.நா.வின் கொழும்பு பணியகத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகும்.
இது தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்றைக் கோருவதற்கும் புதிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான காரணங்களை உறுதிப்படுத்து வதற்கும், புதிய தீர்மானத்தில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது” என்றும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.