![]() |
மத்திய அரசுக்கு தி.மு.க வின் ஆதரவு! |
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவானதால் எதிர்கட்சிகளின் தீர்மானம் தோல்வியடைந்தது.
471 பேர் கொண்ட வாக்கெடுப்பில் 253 பேர் எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுஷ்மா சுவராஜ் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 218 பேர் வாக்களித்தனர். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. இது அரசுக்கு ஆதரவானச் செய்கை என்று கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னதாக சுஷ்மா சுவராஜ் கூறுகையில் சமாஜ்வாடித் தலைவர் முலாயம் சிங் வாக்களித்திருந்தால் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பதே இருந்திருக்காது என்றார்.
அரசை வெற்றிபெறச் செய்யவே முலாயம் சிங் வெளிநடப்பு செய்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அவர் சிபிஐ-க்கு அஞ்சி அரசை ஆதரித்ததாக சுஷ்மா சுவராஜ் நேரடியாக குற்றம்சாட்டினார்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பி துரை பேசுகையில், மக்கள் ஏற்றுக்கொள்ளாத அன்னிய முதலீட்டை மத்திய அரசு அமல்படுத்த முயல்கிறது. அன்னிய முதலீட்டை தி.மு.க., தில்லியில் ஆதரிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் எதிர்க்கிறது. தமிழ்நாடு என்ன இலங்கையிலா இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.