மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி காண்போம்!
டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் நாள்
வைகோ வாழ்த்து!
‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதனினும் அரிது, மாற்றுத் திறனாளியாய் இல்லாமல் பிறப்பது’ என்கிறது மூதுரை.
இயற்கையில் ஊனம் என்பது இல்லை. சத்துணவு மற்றும் மருத்துவக் கவனிப்புக் குறைபாடுகளாலும், உலகில் நடைபெற்ற யுத்தங்கள் போன்ற மனிதத் தவறுகளாலும்தான், பிறவி ஊனமும் செயற்கை ஊனமும் உருவாகிறது.
தமிழ் ஈழ தேசிய இனத்தின் மீது இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் இராணுவ உதவியுடன் சிங்களப் பேரினவாதம் நடத்திய இனப்படுகொலையால், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், கை, கால்கள், உடல் உறுப்புகளை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆகி விட்டனர்.
அணுக்கதிர்வீச்சு, போபால் யூனியன் கார்பைடு, °டெர்லைட் போன்ற நச்சு ஆலைகளாலும், பயிர்களுக்குப் பயன்படுத்தும் இரசாயன உயிர்க்கொல்லி உரங்களாலும் நீர், நிலம், காற்று மாசு அடைந்து, சுற்றுச் சூழல் மாசுபட்டு, நாம் உண்ணும் உணவே நஞ்சாக மாறி, கருச்சிதைவுகளுக்குக் காரணம் ஆகி, மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறக்கின்றன.
நல்ல நிலையில் பிறந்த குழந்தைளுக்கும், புறச்சூழல் மாசுகளால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து மாற்றுத் திறனாளிகளாக மாறி வருகின்றனர்.
நாகரீக சமூகத்தில் மாற்றுத் திறனாளிகள் நடத்தப்படும் விதம் வேதனை அளிப்பதாக உள்ளது. உடல் உறுப்புக் குறைபாடுகளுடன் ஒரு குழந்தை பிறந்தால், அதை ஒரு சுமையாகவே எண்ணிக் கவலை கொள்கின்றனர். அத்தகைய குழந்தைகளைக் கைவிட்டு விடுகின்றனர்; எனவேதான், தொட்டில் குழந்தை, அனாதை இல்லங்கள் உருவாகின்றன.
ஆதரவு அற்ற இக்குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை, உலகப் பொது மன்றம் சட்டமாக்கி, நடைமுறைப்படுத்தும்படி நாடுகளின் அரசுகளைப் பணித்து உள்ளது. அந்த அடிப்படையில், மாற்றுத் திறனாளிகள் கேட்பது பிச்சை அல்ல, உரிமை.
கடந்த தி.மு.க ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் வாரியத்தின் தலைவராக முதலமைச்சரும், ஆலோசகராக அவரின் மகளும், வாரிய உறுப்பினர்களாக குடும்ப உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், அது செயல்படாத வாரியமாகவே இருந்தது.
இந்த ஆட்சியில் இதுவரையிலும் மாற்றுத் திறனாளிகள் வாரியம் அமைக்கப்படவும் இல்லை; புதிய வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவும் இல்லை. எனவே காலம் கடத்தாமல் உடனடியாக வாரியம் அமைத்து, உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுள் அனுபவம் வாய்ந்தவர்களை ஆலோசகர்களாக நியமிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின்பால் அக்கறை கொண்ட, திறமையான அதிகாரியை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தி, அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை, கிராமங்கள் வரை கண்காணிக்க வேண்டும்.
அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகிதம் என்பது, கானல் நீராகவே உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 314 மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலை உத்தரவு வழங்கப்பட்டும், பணியிடம் வழங்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் நிதி 5 லட்சம், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி 10 லட்சம் ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பித்து, மூன்று ஆண்டுகள் ஆகியும் நடைமுறைப்படுத்தவில்லை.
திருமண உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த 3365 நபர்களுக்கு, 6 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஓராண்டு கடந்தும், மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்திலேயே முடங்கிக் கிடக்கிறது.
அரசுப் பேருந்துகள், தொடர் வண்டியில், மாற்றுத் திறனாளிகள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
அரசு பொது நிறுவனங்களில், பேருந்து, தொடர் வண்டிகளில், கழிப்பறைகளில் மாற்றுத் திறனாளிகள் சிரமம் இன்றி சென்று வர வழிவகை செய்திட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுகின்ற அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்.
பல்வேறு நிலைகளில் அலைக்கழிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், ஆலயங்களுக்குச் சென்று, வழிபட்டு ஆறுதல் தேட முனைவர். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவு எண் 47177/2012 செப்டம்பர் 14 அன்று தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, இனி மாற்றுத் திறனாளிகள் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி மறுத்து உள்ளது.
ஊன்றுகோல், செயற்கைக் கால், மற்றும் செயற்கை உபகரணங்கள், தோல் பொருட்களால் செய்யப்பட்டவை என்பதால், ஆகம விதிகளின்படி சன்னதி வரை சென்று, வழிபாடு செய்ய வழிவகை இல்லை என்று அனுமதி மறுத்து உள்ளது.
இது தீண்டாமையின் மறு வடிவமே.
அப்படியானால், இசைக் கருவிகள், பெல்ட், மணிபர்°, கடிகார கைபட்டை போன்றவை, தோல் பொருட்களால்தான் செய்யப்படுகின்றன. இதை அணிந்து வருபவர்களையும் ஆலயத்திற்குள் அனுமதிக்க மறுப்பீர்களா?
வாழ்க்கையின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள்தாம், சமபந்தி, அன்னதானத் திட்டத்தின் பயனாளிகள். அவர்களை ஆலயத்துக்கு உள்ளே நுழையாமல் தடுக்கின்ற வகையில், இந்த உத்தரவு அமைந்து உள்ளது.
மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாத்திட, மேற்கு நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள், இந்தியாவில் இல்லை; 25 ஆண்டுகள் பின்தங்கி இருக்கின்றோம்.
மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றப் பாதையிலே தடைக் கற்களாக இருக்கின்ற அதிகாரவர்கத்தின் மன ஊனத்தை உடைத்து எறிய, டிசம்பர் 3, உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் சூளுரை ஏற்போம்.
அன்றாட வாழ்க்கையில் அனைத்து முனைகளிலும் போராடிக் கொண்டு இருக்கின்ற மாற்றுத் திறனாளிகள் விடியலைத் தரிசிக்க, சக மனிதர்களைப் போன்று அனைத்து உரிமைகளையும் உண்மையாகப் பெற்று, (‘ஆயமந வாந சiபாவ சநயட’) இன்புற்று வாழ, மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் சார்பில், மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
2.12.2012 மறுமலர்ச்சி தி.மு.க