முகநூலினால் ஏற்படும் அரசியல் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு சில நாடுகள் அதனை தடைசெய்துள்ளன.
அவ்வரிசையில் புதிதாக இணைந்துள்ளது தஜிகிஸ்தான். முகநூலின் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதாக கூறியே அந்நாட்டு அரசு இதனை தடைசெய்துள்ளது.
தஜிகிஸ்தான் தொலைத்தொடர்பாடல் அலுவலகம் முகநூலினை தடைசெய்யும் படி அந்நாட்டின் 12 இணையம் மற்றும் தொலைத் தொடர்பாடல் வழங்குனர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டில் சுமார் 40,000 பேஸ்புக் பாவனையாளர்கள் உள்ளனர்.
மேலும் அங்கு முகநூல் தடைசெய்யப்படுவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்னரும் கடந்த மார்ச் மாதம் முகநூலினை தற்காலிகமாக தடைசெய்தது தஜிகிஸ்தான்.
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள தஜிகிஸ்தான் தெற்கே ஆப்கானிஸ்தான், மேற்கே உஸ்பெகிஸ்தான், வடக்கே கிர்கிஸ்தான், மற்றும் கிழக்கே சீனா ஆகிய நாடுகளைச் சூழ அமைந்துள்ளது.
முகநூலினை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்துள்ள பாகிஸ்தான், வியட்நாம், பங்களாதேஷ், எகிப்து, ஈரான் வரிசையில் தஜிகிஸ்தானும் சேர்ந்துள்ளது.