
வரும் டிசம்பர் 4ம் நாள் தொடக்கம் 6ம் நாள் வரை நடைபெறும் உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மலேசியா வரவிருந்தார்.
போர்க்குற்றவாளியான அவரை மலேசியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி அரசசார்பற்ற நிறுவனங்கள், எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்திருந்தன.
இதையடுத்து, மலேசியப் பயணத்தை இலங்கை அதிபர் கைவிட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான போராட்டங்கள் கைவிடப்படுவதாக அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் பயணம் கைவிடப்பட்டுள்ளதை மலேசிய அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வரவேற்றுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் இளைஞர் பிரிவின் தலைவர் ரி.மோகன்,
“மகிந்த ராஜபக்சவினால், இந்தியாவுக்குள் நுழைய முடிந்தாலும், மலேசியாவில் கால் வைக்க முடியாது.
எமது நாட்டுக்குள் போர்க்குற்றவாளிளை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
அதேவேளை, ஜனநாயக செயற்பாட்டுக் கட்சியின் தலைவரும், புகிட் ஜிலுகோர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கர்பால் சிங், மகிந்த ராஜபக்சவின் பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதை தமது கட்சி வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.