தருமபுரியில் வீடுகள் எரிக்கப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 270 வீடுகள் ஒரு பிரிவினரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் அந்த கிராமங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டனர்.காதல் திருமணமே கலவரத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில் கலவரம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது கலவர வழக்கின் விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் ஓரிரு நாளில் விசாரணையைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.