Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முக்கிய முடிவு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முக்கிய முடிவு எடுத்து உள்ளது.

ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவி காலம் அடுத்த மாதம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் வெளியிட இருக்கிறது.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி பதவிக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த இருக்கிறது. இதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பா.ஜனதா கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மட்டுமோ, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமோ தனித்து தங்களது வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய முடியாது. அந்த இரு கட்சிகளுக்கும் இடதுசாரி கட்சிகள் மற்றும் கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.

இதில் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு மிக முக்கியம் என்று கூறப்படுகிறது.

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியோ பிற இடதுசாரி கட்சிகளோ யாரை ஆதரிக்கப்போகின்றன என்று இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடந்தது. இதில், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று முடிவு எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் ஆட்சி மன்றக்குழுவுக்கு விட்டு விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அப்படி முடிவு எடுப்பதற்கு முன்னதாக, ஆட்சி மன்றக்குழு இதர இடதுசாரி கட்சிகளுடனும், ஒத்த கருத்து உடைய இதர கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து, யாரை ஆதரிப்பது என்பது குறித்தான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்றும் மத்தியக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இடதுசாரி கட்சிகள் இதுவரை வாய் திறக்கவில்லை. என்றாலும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு வேட்பாளரை நிறுத்த முன்வரவேண்டும் என்று முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும், மாநில மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பினரயி விஜயனுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. பினரயி விஜயனை மாற்ற வேண்டும், இல்லையென்றால் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில், அகில இந்திய செயலாளர் பிரகாஷ் கரத்துக்கு அச்சுதானந்தன் கடிதம் எழுதி இருந்தார்.

டெல்லியில் நடந்த மத்தியக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரின் பிரச்சினை குறித்து முதலில் மாநில கமிட்டியும், மாநில செயற்குழுவும் கூடி விவாதித்து முடிவு எடுக்கட்டும் என்று மத்திய கமிட்டி தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன்சிங் மீதும், 14 மத்திய மந்திரிகள் மீதும் அன்னா ஹசாரே குழு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது. அதுகுறித்து 3 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்னா ஹசாரே குழு கோரி இருந்தது.

ஆனால், பிரதமர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை இல்லை என்று பிரதமர் அலுவலகம் அன்னா ஹசாரே குழுவுக்கு கடிதம் எழுதியது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா கரத் இதுகுறித்து நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அன்னா ஹசாரே குழுவுக்கு பிரதமர் அலுவலகம் எழுதிய கடிதத்தில் தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. மன்மோகன்சிங் மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை. அவர் நிலக்கரி இலாகா மந்திரியாக பதவி வகித்தபோது ஊழல் நடந்ததாக தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அமைப்பு (சி.ஏ.ஜி) அரசியல் சாசன அமைப்பில் ஒரு அங்கம். ஆகவே, அதுகுறித்து பிரதமர் அலுவலகம் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post