வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் எல்லாம் கறுப்பு பணம் அல்ல என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நேற்று மேற்கு வங்காள மாநிலம் கார்கிராமில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பரவலாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் எல்லாமே கறுப்பு பணம் அல்ல.
அவை, தொழில் அதிபர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்களால் போடப்பட்டு இருக்கலாம். எவ்வளவு பணம் என்பதை துல்லியமாக அறிவதற்கு சிறிது காலம் ஆகலாம். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பண விவரங்களை அறிய 37 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சி காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் உரத்தின் விலை அதிகரித்துவிட்டது. இந்த நாடுகளில் இருந்து பொட்டாசியம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அதை நிறுத்திவிட்டோம்.
பெட்ரோலிய பொருட்களுக்கும், உணவு பொருட்களுக்கும் மத்திய அரசு அதிகமான மானியம் அளித்து வருகிறது. எனவே, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உதவி செய்ய முடியாத அளவுக்கு எங்கள் கைகள் கட்டப்பட்டு உள்ளன.
சமூக-பொருளாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த திசையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், கூட்டணி கட்சிகளை சார்ந்து நாங்கள் செயல்பட வேண்டி இருப்பதாலும், கூட்டணி கட்சிகள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாலும் சமூக-பொருளாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.
இந்த கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் சவுத்ரி பரபரப்பான தகவலை வெளியிட்டார். 'பிரணாப் முகர்ஜி அடுத்த தடவை மேற்கு வங்காளத்துக்கு வரும்போது நாட்டின் ஜனாதிபதியாக வருவார்' என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால், பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. டெல்லியில் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால், பயணத்தை பாதியில் முடித்து கொண்டு டெல்லி செல்வதாக அவர் கூறினார்.