சென்னையில் மனைவியின் சேலையில் தூக்குபோட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சுந்தரம்(வயது 54). இவர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார்.
இவரது மனைவி பெயர் மோகனா. இவர்களுக்கு சரண்யா(25) என்ற மகளும், தினேஷ்(21) என்ற மகனும் உள்ளனர். சரண்யா நர்ஸ் வேலைக்கு படித்துள்ளார்.திருமணமாகி சவூதிஅரேபியாவில் குடும்பத்துடன் வாழ்கிறார். மகன் தினேஷ் பட்டப்படிப்பு படித்துள்ளார். கால் சென்டரில் வேலை பார்கிறார். சுந்தரம் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவ விடுப்பு எடுத்து, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சுந்தரம் நேற்று காலையில் வீட்டில் இருந்தார். அவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். மகன் வெளியில் சென்றிருந்தார். 1 மணி அளவில் சுந்தரம் படுக்கை அறையில் மனைவியின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணம் தூக்கில் தொங்கியது.
சுந்தரத்தின் உடலை பார்த்து, சமையல் செய்து கொண்டிருந்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் சங்கரலிங்கம், விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் ஆகியோர் நேரில் சென்று சுந்தரத்தின் பிணத்தை கைப்பற்றி விசாரித்தார்கள்.
சுந்தரம் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. இருந்தாலும் போதை பழக்கம்தான் அவரை இந்த தற்கொலை முடிவுக்கு தள்ளி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி மகனிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே தற்கொலைக்கு அவர் முயன்றதாக தெரிகிறது. நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சுந்தரம் அடிக்கடி சொல்வாராம். அவர் குற்றப்பிரிவு போலீசில்தான் பெரும்பாலும் பணிபுரிந்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றபிறகுதான், சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் முதல்-முதலாக வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரத்தின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள திருணாபூண்டி ஆகும். பிரேதபரிசோதனைக்கு பிறகு சுந்தரத்தின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று காலை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.