Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருவண்ணாமலை அருகே பரிதாபம் கோவில் தேர் சரிந்து 5 பேர் பலி



ஆரணியில் கயிலாய நாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்தது. இதில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் 6 பேர் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் கோட்டை அறம்வளர் நாயகி உடனுறை கயிலாயநாதர் சிவன் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 40 அடி உயரமும், 15 அடி அகலமும் 15 டன் எடையும் கொண்ட தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கொண்டிருந்தது.

மணிக்கூண்டு அருகே தேர் சென்றபோது தேரின் அச்சு முறிந்து முன் பக்கமாக சாய்ந்தது. தேரின் உட்பகுதியில் இருக்கும் 2 சக்கரங்கள் தவிர, பக்கவாட்டில் இருக்கும் 4 பெரிய சக்கரங்களும் தனித்தனியாக கழன்று விட்டன.

தேர் சரிந்து முன் பக்கமாக விழுந்ததில் தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவர்களும், தேருக்கு கட்டை போட்டவர்களும் தேருக்குள் சிக்கிக் கொண்டனர். தேருக்கு அடியில் சிக்கியவர்களின் மரண ஓலத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது.

அதையடுத்து உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு, தேரை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சுமார் 15 டன் எடை கொண்ட தேரை தூக்குவதில் மிகுந்த சிரமம் இருந்தது. சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு சரிந்து விழுந்த தேர் தூக்கப்பட்டது.

இதில் ஆரணி அருணகிரி தெருவைச் சேர்ந்த கோவில் பக்த சங்க பொருளாளர் சம்பத் என்பவரது மகன் சபரி (வயது 35), ஆரணி ரோட்டரி சங்க செயலாளர் ஜவகர் (35), தேருக்கு கட்டை போடுபவர்கள் எஸ்.வி. நகரத்தைச் சேர்ந்த செங்கல்வராயன் (60), அவரது மகன் ராமதாஸ் (35), சரவணன் (34), ஆரணியைச் சேர்ந்த மணி (37), செந்தில்வேல் (36), ஆறுமுகம் (32), கீர்த்தி (25), ஆரணி கொசப்பாளையத்தைச் சேர்ந்த ராமு (60), படவேடு கோவில் அய்யர் கணேசன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதில் ஜவகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். மற்றவர்கள் அனைவரும் உடனடியாக ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் சபரி, செங்கல்வராயன், ராமதாஸ், சரவணன் ஆகியோர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் மணி, ஆறுமுகம், செந்தில்வேல், ராமு, கீர்த்தி, கணேசன் ஆகிய 6 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post