இலங்கையில் நீதித்துறை நன்கு விருத்தியடைந்ததாகக் காணப்படினும் வினைத்திறன் மிக்க குற்றவியல் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு கணிசமான தடைகள் காணப்படுவதாகப் பிரிட்டனின் 2011ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல வழக்குகளிலும் சட்டம் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் பிரயோகிக்கப்பட வேண்டும் என பிரிட்டன் இலங்கையிடம் வலியுறுத்தியது என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்காகவே பொலிஸ் படையின் செயலாற்றலை அதிகரிக்கச் சமுதாய பொலிஸ் முறைச் செயற்றிட்டம் ஒன்றுக்கு பிரிட்டன் நீதி வழங்கியது. இலங்கையின் மனித உரிமை நிலைமையை பல வழிகளிலும் பிரிட்டன் அவதானித்துவருகின்றது.
குறிப்பாக மனித உரிமைப் பிரச்சினைகளிலும் 319 தனியாள்கள் தொடர்பான சம்பவங்களிலும் பிரிட்டன் அவதானம் செலுத்தியுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் லிலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமையும் 2010 ஜனவரியில் காணாமல்போனவரும் பின்னர் சிதைந்த உடலாக மீட்கப்பட்டவருமான பட்டாணி ராஸிக் பற்றியும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமை சட்டத்தரணியும் முன்னாள் ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரநஷனலின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஒரு வழக்குரைஞரின் வீட்டின் மீது 2008இல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் மீதான விசாரணையில் முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை. இதுபோலவே 2009 இல் யுத்தம் முடிந்த பின் சிவில் சமூக உறுப்பினர்களான சாந்தகுமார், சுந்தரராஜ் ஆகியோர் காணாமல் போனமை பற்றிய விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என இந்த அறிக்கை கூறுகின்றது.