`முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அனுமதி கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்' என்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி நேற்று அறிவித்தார்.

அந்த அறிக்கையில் முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருப்பதாகவும், வேறு புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் குழுவின் அறிக்கையை அடுத்து நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், முதல்-மந்திரி உம்மன் சாண்டி தலைமையில் மந்திரி சபைக் கூட்டம் நடந்தது.
பின்னர், புதிய அணை கட்டப்படும் வரை முல்லைப்பெரியாறு அணையின் தற்போதைய நீர்மட்டத்தின் அளவை 136 அடிக்கும் கீழ் வைத்துக்கொள்ளப்படும் என்று உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
`நீதிபதி ஆனந்த் கமிட்டியின் அறிக்கை இறுதியானது அல்ல. அந்த அறிக்கையில் கேரள மாநிலத்திற்கு சாதகமான கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால், கேரள அரசு தனது சொந்த செலவில், ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய அணையை கட்டிக்கொள்ளலாம் என்பதே அது. அறிக்கையில் கூறப்பட்ட இந்த கருத்து கேரள மாநிலத்திற்கு புதிய அணை கட்டிக்கொள்ள `தடை ஏதும் இல்லை' என்ற பொருளிலே அமைந்துள்ளது.
எனவே இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும்.
புதிய அணை கட்டப்பட்டாலும், தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நீரின் அளவுதான் தொடர்ந்து வழங்கப்படும். `தமிழ்நாட்டுக்கு தண்ணீர். கேரள மக்களின் பாதுகாப்பு' என்பதே எங்கள் நிலைப்பாடு. அதனால், புதிய அணை கட்டும் எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.