தர்மபுரியில் நகை கொள்ளை முயற்சியில் கைதான வடமாநில கொள்ளையர்கள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் தமிழகம்-கர்நாடகத்தில் கைவரிசை காட்டியது அம்பலமாகி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து கொள்ளையர்கள் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு தனித்தனியாக அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. கைதான அனைவரிடம் இருந்தும் செல்போன்கள் மற்றும் ஏராளமான ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த அனைவரது செல்போனுக்கும் குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்து இருக்கிறது. எனவே அவன் தான் இந்த கும்பலின் தலைவனாக இருந்து மூளையாக செயல்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த கும்பலின் தலைவன் மார்டின் என்பது தெரியவந்தது. அவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொள்ளையர்கள் தனித்தனியாக பிரிந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கண்காணித்து வந்து உள்ளனர். அவர்கள் நகைக்கடைகளை மட்டுமே குறிவைத்து திட்டம் போட்டு இருக்கிறார்கள். இதன்படி அவர்கள் தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களை குறிவைத்து கண்காணித்து வந்துள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள பெரிய நகைக்கடைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.
முதலில், அவர்கள் தர்மபுரி எஸ்.எஸ்.எஸ். நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த நகைக்கடை அருகில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அன்றைய தினம் நகைக்கடையில் தங்கள் கொள்ளை திட்டத்தை நிறைவேற்ற முடியாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அருகில் இருந்த செல்போன் கடைக்குள் நுழைந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளி சென்று உள்ளனர்.
பின்னர் இந்த கொள்ளை கும்பல் திருப்பூரில் உள்ள நகைக்கடையிலும், வேலூர் அடகு கடையிலும் கொள்ளையடித்துள்ளது. அதைத்தொடர்ந்து தர்மபுரி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற போது, அதிநவீன எஸ்.எம்.எஸ். மூலம் அவர்கள் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல் இந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பல நகைக்கடைகளிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள். மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி ஒரு சில இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.