Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கருடவாகன சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி கோவில் திருவிழாவில் பரிதாபம்



கோவில் திருவிழாவின்போது கருடவாகன சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 3 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

விருதுநகர் அருகே உள்ளது சென்னல்குடி கிராமம். இந்த பகுதியில் புகழ்பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அன்று குதிரை வாகனத்தில் பெருமாள், வாழவந்தான்புரத்தில் உள்ள கவுசிகமாநதி ஆற்றில் இறங்கினார். அதன்பின்னர் பொட்டல்பட்டியில் உள்ள ஒரு தோப்பில் பெருமாள் 2 நாள் தாங்கினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்து பெருமாளை தரிசித்தனர்.

நேற்று காலை 51/2 மணியளவில் பொட்டல்பட்டியில் இருந்து சென்னகுடியில் உள்ள கோவிலுக்கு சப்பரத்தின் மூலம் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பட்டார்.

அப்போது சப்பரத்தின் மேல் அலங்கரிக்கப்பட்ட குடை வைக்கப்பட்டிருந்தது. இந்த குடை இரும்புகம்பிகளால் இணைக்கப்பட்டிருந்தது. பொட்டல்பட்டியில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வந்த போது திடீரென அந்த பகுதியில் சென்ற மின்சார வயர், சப்பரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த குடையின் மீது உரசியது.

அடுத்த வினாடியே அந்த குடையில் இணைக்கப்பட்டிருந்த இரும்புக்கம்பி வழியாக சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது சப்பரத்தில் இருந்த இரும்புக்கம்பிகளை பிடித்து வந்த கார்மேகம் (வயது 17), மாரீஸ்வரன் (17), அழகுராஜா (17) ஆகியோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.

என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த அந்த நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் தூக்கி வீசப்பட்டதால் பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி பலியான வாலிபர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மின்சாரம் தாக்கி இறந்த கார்மேகம், மாரீஸ்வரன் ஆகிய இருவரும் கட்டிட தொழில் செய்து வந்தனர். வாலிபர் அழகுராஜா மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த சம்பவத்தால் சாமி ஊர்வலம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் மீண்டும் சப்பரம் தூக்கப்பட்டு சென்னல்குடி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post