பிரான்சு நாட்டு ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்டு கட்சி வேட்பாளரான பிரான்கோசிஸ் ஹோலண்டே 51.7 சதவீதம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக இருந்த நிகோலஸ் சர்கோசிக்கு 48.3 சதவீதம் ஓட்டுகள் கிடைத்து தோல்வியை தழுவினார். இந்த வெற்றியின் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சோசலிஸ்டு கட்சியை சேர்ந்தவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். ஹோலண்டே வருகிற 16-ந் தேதி அல்லது அதற்கு முன்னதாக புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஹோலண்டேவுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்கா வரும்படியும், வெள்ளை மாளிகையில் தன்னை சந்திக்கும்படியும் ஒபாமா கேட்டுக் கொண்டார். அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இம்மாதம் 8 நாட்டு தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஹோலண்டே செல்லும் போது ஒபாமாவை சந்திப்பார் என தெரிகிறது.