ஊட்டியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
ஊட்டியில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வனப்பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. மழையால் முதுமலை புலிகள் காப்பகம் கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊட்டியில் நேற்று காலை நல்ல வெயில் அடித்தது. பின்னர் மதியம் சுமார் 12.30 மணிஅளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சிறிய ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆலங்கட்டியை கண்டு ரசித்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழையாக உருவெடுத் தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கூட்செட் சாலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது.
ஊட்டி மார்க்கெட்டில் உள்ள ஒரு சில கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்தனர். மழையால் மார்க்கெட் வந்த பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஊட்டி மின்வாரிய ரவுண்டானா பகுதியில் மழை நீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
எதிர்பாராத நிலையில் பெய்த இந்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். பலர் மழையில் நனைந்தபடி தாங்கள் தங்கியிருந்த இடங்களுக்கு திரும்பினர். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மழை வந்ததும், மரத்தின் அடிப்பகுதியில் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மழையால் ஊட்டியில் நேற்று பகல் நேரத்திலேயே குளிர் நிலவியது. மேலும் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால் ஊட்டி பார்சன்ஸ்வேலி அணை, காமராஜ்சாகர் அணை, டைகர்ஹில் அணை, பைக்காரா உள்ளிட்ட அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
மழை காரணமாக கிராம பகுதியில் உள்ள குளங்கள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த மழையால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது நிலங்களில் காய்கறிகள் பயிரிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று பெய்த மழை காரணமாக தண்ணீர் அதிகளவு தேங்கியது. ஏற்கனவே மோசமான காட்சி அளிக்கும் ஊட்டி பஸ் நிலையம் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பஸ் ஏற முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
சமவெளி பகுதிகளில் கத்தரி வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் ஊட்டியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.