Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததற்கு எதிர்ப்பு 10 நாட்களுக்குள் உத்தரவை திரும்ப பெற நடவடிக்கை



நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் அடுத்த பட்டத்துக்கு உரியவர் என்று மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதை 10 நாட்களுக்குள் திரும்ப பெறாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆதீன கர்த்தர்கள், மடாதிபதிகள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்து உள்ளார். மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும். இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. இதை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டதாக பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டன.

இந்த நிலையில் இது குறித்து ஆதீன கர்த்தர்கள் மடாதிபதிகள் கலந்து கொண்ட அவசர கூட்டம் நேற்று மாலை நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடந்தது. கூட்டத்துக்கு தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர். வடலூர் ஊரன் அடிகள் சுவாமிகள் தீர்மானங்களை படித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் அடுத்த பட்டத்துக்கு உரியவர் என்று மதுரை ஆதீனம் அறிவித்துள்ளதை 10 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை கேட்டுக் கொள்வது.

மதுரை ஆதீனம் மேலே சொல்லப்பட்ட தீர்மானத்தில் உள்ளதை ஏற்காமல் தொடர்ந்து தமது விருப்பப்படி செயல்பட்டால் சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசனை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பது.

திருமூலர் வாக்கை உள்ளத்தில் கொண்டு மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் சைவ சம்பிரதாயங்களுக்கும், மரபிற்கும், முற்றிலும் முரணானது என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செங்கோல் ஆதீனம், காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீனம், துலாஊர் ஆதீனம், வேலாக்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், கோவை கவ்மாரமட ஆதீனம், திருப்பனந்தாள் காசி திருமடத்து ஆதீனம், சிதம்பரம் மவுனமடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஆகிய ஆதீனங்கள் மற்றும் ஏராளமான மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post