Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு இலங்கையினை தாக்கியது இந்தியா

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நடந்த பூகோள கால மீளாய்வின் போது, அமெரிக்காவைப் போலவே இந்தியாவும், இலங்கை நிறைவேற்றிய வேண்டிய பொறுப்புகளைப் பட்டியலிட்டு, இலங்கைக்கு  அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி நபானிற்றா சக்ரவர்த்தி- 

“வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமை, முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம் உள்ளிட்ட சில விடயங்களில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்களை இந்தியா வரவேற்கிறது. 

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டு இலங்கைக்கு உள்ளது. 

விரைவான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

2013ஆண்டில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்தி, அங்குள்ள மக்கள் ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், தனியார் நிலங்களில் இருந்து படையினரை அகற்றுதல், உயர்பாதுகாப்பு வலயங்களை விலக்குதல், பொதுமக்களின் வழமையான செயற்பாடுகளில் நிலவும் இராணுவத் தலையீட்டை அகற்றுதல், உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, பெருமளவு பொதுமக்களின் இழப்புகளுக்கு காரணமான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும். 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை விரைவான நடவடிக்கையை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்தியப் பிரதிநிதியின் கருத்துகள் அமைந்துள்ளன. 

நீண்டகாலமாக அமெரிக்கா வலியுறுத்தி வருவது போன்று இந்தியாவும் இந்த அமர்வில் கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post