கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எந்தெந்த துறைகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் கேள்வி.
கூடங்குளம் அணு உலைகளை இயக்குவதில் சிக்கல் இன்றும் நீடிக்கிறது. பல்வேறு குளறுபடிகள் இந்த அணு உலைகளை திறப்பதில் ஏற்பட்டுள்ளது. அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு இது வரை தீர்வு கிடைக்கவில்லை . போராட்டமும் அரச வன்முறையால் ஒடுக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நடுவண் அரசுக்கு சில கேள்விகளையும் எழுப்பி உள்ளது .
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், ‘‘1989–ம் ஆண்டு காலாவதியான அனுமதியை வைத்து 2001–ல் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இதற்கு 2004–ம் ஆண்டு தான் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறப்படவில்லை’’ என்று வாதாடினார்.
அதற்கு பதில் அளித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மோகன் பராசரன் வாதாடினார். அவர் கூறும்போது, ‘‘கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனைத்து துறைகளின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2–வது யூனிட்டுகள் செயல்பட கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்தெந்த துறைகளிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இன்றும் (புதன்கிழமை) விசாரணை நடக்க இருக்கிறது.