மத்திய அரசிடம் டெல்லி ஒப்படைத்துள்ள கூடுதல் மின்சாரத்தை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. டெல்லி அரசு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை, ஆயிரத்து 721 மெகாவாட் கூடுதல் மின்சாரத்தை மத்திய தொகுப்புக்கு அளிக்க உள்ளதால், அந்த மின்சாரத்தை, மின் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்துக்கு வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது. இதுதவிர, மத்திய மின் தொகுப்பில் இருந்து தெற்கு மின் தொகுப்பில் இணைப்பதற்கு போதிய மின் வழித்தடங்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த மற்றொரு மனுவில், டெல்லி வழங்கும் கூடுதல் மின்சாரத்தை வேறு எந்த மாநிலத்துக்கும் வழங்காமல், தமிழகத்துக்கு மட்டும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறுமென உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.