கிரனைட் முறைகேடு தொடர்பாக புகார் எழுந்துள்ள மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியை கைது செய்வதற்கு விதித்திருந்த தடை உத்தரவு காலத்தை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கிரனைட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள துரைதயாநிதியை கைது செய்யவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே தடை விதித்திருந்தது.
தடை உத்தரவு நேற்று முடிந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், துரைதயாநிதியை கைது செய்வதற்கான தடை உத்தரவு காலத்தை நவம்பர் 21ம் தேதி வரை நீட்டித்ததுடன், வழக்கின் விசாரணையையும் அன்றைய தேதிக்கே ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், பி.ஆர்.பி கிரனைட் நிறுவனத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி பி.ஆர்.பழனிச்சாமியின் மகன் சுரேஷ்குமார் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி வினோத்கோய் சர்மா, பிஆர்பி நிறுவனத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறும், வரும் 10ம் தேதி முதல் அந்நிறுவனம் செயல்படலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் வரும் 6, 7, 8ம் தேதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் 2 கட்டடங்களில் கணினி, ஆவணங்கள் உள்ளிட்டவைகள் விசாரணைக்கு காவல்துறையினர் பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக பிஆர்பி நிறுவனத்தின் பண வர்த்தகங்கங்களுக்கு தடை விதித்து வங்கி கணக்குகளை முடக்கி அரசு நடவடிக்கை எடுத்திருந்தது, அந்த தடையை நீதிபதி ரத்து செய்தார்.
மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை வங்கிகளில் இருந்து அறிக்கைகளை பெற்று காவல்துறையினர் விசாரணை நடத்தி கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.