Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையத்தில்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 6ம் தேதி துவங்க உள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, ஆசிரியர்களாக பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன்படி, கடந்த அக்டோபர் 14ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 725 பேரும், இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர்.

இந்த தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. இதில், முதல் தாள் தேர்வில் 10,397 பேர் 60 சதவீதம் மற்றும் அதற்கும் மேலான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டாம் தாள் தேர்வில் 8 ஆயிரத்து 849 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி மூலம் விடைத்தாள்களை திருத்தியதில், பலரும் முக்கிய தகவல்களை அளிப்பதில் தவறுகள் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கேள்வித்தாளின் குறியீட்டு எண்ணை குறிப்பிடாத விடைத்தாள்களை திருத்த முடியாமல், அவை நிராகரிக்கப்பட்டதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, 32 வருவாய் மாவட்டங்களிலும் வரும் 6ம் தேதி துவங்குகிறது.

இதற்கான அழைப்பு கடிதங்களை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post