மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வைகோ சந்திப்பு!
மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை, கொல்கத்தாவில், மேற்கு வங்க அரசின் முதல் அமைச்சர் அலுவலகத்தில், இன்று நவம்பர் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு வைகோ சந்தித்தார். பொன்னாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார்.
முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி வைகோவுக்கு நன்றி கூறி, நினைவுப் பரிசு அளித்தார். சிங்கூர் நிலப் பிரச்சினைக்காக, கொல்கத்தாவில் தாம் காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்தபோது, சென்னையில் இருந்து வந்து வைகோ தனக்கு ஆதரவு தெரிவித்ததை நினைவு கூர்ந்தார். வரும் ஜனவரி 23 ஆம் தேதி, நேதாஜி பிறந்த நாள்விழாவில், கலந்துகொள்ளுமாறு வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். தாம் கலந்து கொள்வதாக, வைகோ கூறினார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தம் 24 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தபோது, வைகோ ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளை புத்தகங்களாக வெளியிடும் நிகழ்ச்சி 2013 மார்ச் 6 ஆம் தேதி புது டில்லியில், கான்ஸ்டிட்டியூசன் கிளப் அரங்கத்தில் நடைபெற இருப்பதையும், தன்னை நேசிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அதில் பங்கு ஏற்க அழைத்து இருப்பதையும், முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கு ஏற்றுச் சிறப்பிக்க வேண்டுமென வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அதில் பங்கேற்பதாக முதல் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் மத்திய அரசில் குவிக்கப்பட்டு உள்ள அதிகாரங்கள் பலவற்றை, மாநிலங்களுக்கு வழங்கவும், மத்திய அரசினுடைய எதேச்சதிரகாரப் போக்கை மாற்றவும், உறுதிகொண்டு போராடும் மம்தா பானர்ஜிக்கு, வைகோ வாழ்த்துத் தெரிவித்தார். கொல்கத்தாவில் உள்ள சாதாரண மக்கள், டாக்சி டிரைவர் முதல், பெட்டிக்கடைக்காரர் வரை மம்தா பானர்ஜி அவர்கள் மீது எல்லையற்ற அன்பும் மதிப்பும் கொண்டு இருப்பதை அவர்கள் வாய்மொழியாக தான் அறிந்ததை, முதல் அமைச்சருக்கு வைகோ தெரிவித்ததோடு, இந்திய அரசியல் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அதன்பின், வாசலுக்கு வெளியில் வந்து வைகோவை முதல் அமைச்சர் வழியனுப்பி வைத்தார்.அதன்பின் பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சி ஊடகத்தினரையும் வைகோ சந்தித்தார்.
மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்தும், ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு செய்த துரோகத்தையும், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் 2010 இல் சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதையும், 2011 இல் அமெரிக்க அரசு சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததையும், தற்போதும் இலங்கை இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படுவதைப் பற்றி வைகோ விளக்கமாகக் கூறினார்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளே இந்திய அரசைத் தீர்மானிக்கும் என்றும் சொன்னார்.