Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீலம் புயலால் சேதங்கள்: நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வைகோ வலியுறுத்தல்!

வைகோ வேண்டுகோள்
வடகிழக்குப் பருவ மழையைத் தொடர்ந்து உருவான நீலம் புயலால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன; இலட்சக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன; வேர்க்கடலை உள்ளிட்ட மற்றப் பணப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாகவோ, பகுதி அளவிலோ சேதம் அடைந்து உள்ளன.

வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் இறந்துவிட்டனர். சென்னையில் தரை தட்டிய பிரதிபா காவேரி என்ற சரக்குக் கப்பல் ஊழியர்கள், ஐந்து பேர் கடலில் மூழ்கி இறந்து உள்ளனர். மழை வெள்ளப் பாதிப்பினால் சுமார் 90 பேர் வரை இறந்து உள்ளனர்.

மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன. பல இடங்களில் மின் விநியோகம் இல்லை. பல பள்ளிகளுக்குள் மழை நீர் தேங்கிக் கிடக்கின்றன. குழந்தைகளையும், வயோதியர்களையும் நோய்க் கிருமிகள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து, தேவையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, வீடுகளை இழந்தவர்களுக்கு அரசுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தர வேண்டும். மழை வெள்ளத்தால் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பெரும் சேதத்தை எதிர்கொண்டு உள்ள விவசாயிகளுக்கும் உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். மிகவும் மோசமாக சேதம் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மாநிலச் சாலைகள், மாவட்டச் சாலைகளை, போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர், ம.தி.மு.க.
தாயகம்
[vuukle-powerbar-top]

Recent Post