Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக! அரசு தரப்பும் வைகோவும் கடும் வாக்குவாதம்




விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக! அரசு தரப்பு மற்றும் வைகோ கடும் வாக்குவாதம்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடை செல்லத்தக்கதா? என்று ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில், தீர்ப்பாயத்தின் தலைவர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் அவர்கள் முன்னால், இன்று (நவம்பர் 3 ஆம் தேதி) காலை 11 மணிக்கு இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது.

மத்திய அரசு வழக்கறிஞர் சாண்டியாக், புலிகள் மீதான தடையை நியாயப்படுத்த முயன்று வாதாடினார். புலிகளைத் தடை செய்தது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆதாரங்களோடு முன் வைத்த வாதம் பின்வருமாறு:

வைகோ: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்றாலும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் அந்த அமைப்பினால் ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தைக் கொண்டுதான் தடை செய்ய முடியும்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் குறிக்கோளான தமிழ் ஈழம் என்பது தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் என்ற காரணத்தினால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதாக இங்கு மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். அந்த அடிப்படையிலேயே அவரது மொத்த வாதமும் அமைந்தது. மணல் மீது கட்டப்பட்ட வாதக் கோட்டையாக அது நொறுங்கிப் போய்விட்டது.
தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட சில அமைப்புகளின் பெயரைச் சொல்லி, அவை அகண்ட தமிழ்நாடு கேட்பதாகவும், பாரம்பரிய தமிழர் பகுதியைத் தனி நாடாகக் கேட்பதாகவும், அது தமிழ் ஈழத்தையும் சேர்த்துத்தான் குறிக்கிறது என்று கவைக்கு உதவாத வாதத்தை அவர் இங்கு முன் வைத்தார். தனித் தமிழ்நாடு என சில அமைப்புகள் பிரிவினை கோரி அவை தடை செய்யப்பட்டிருப்பதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை. அந்த அமைப்புகளைப் பற்றிய விவாதத்திற்குள் நான் செல்லவும் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதே நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து என்று மத்திய அரசு வக்கீல் வாதாடினார்.

விடுதலைப்புலிகளை ஆதரித்து நான் பேசியதற்காக ‘பொடா’ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் 19 மாத காலம் அடைக்கப்பட்டு இருந்தேன். புலிகளை ஆதரித்துப் பேசுவது ஜனநாயக உரிமை என்றும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளில் அப்படிப் பேசியதற்கு குற்றம் சுமத்த முடியாது என்றும் நான் சிறையில் இருந்தவாறு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கொள்கையை ஆதரித்துப் பேசுவது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகுமா? ஆகாதா? என்று ரிட் மனுவில் கேள்வி எழுப்பி இருந்தேன்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் குற்றம் ஆகுமே தவிர, தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் ஆகாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்புக் கூறியது.

எனவே, புலிகளை ஆதரித்து தமிழ்நாட்டில் கூட்டம் பேசுவதையோ, ஊர்வலம் செல்வதையோ, பேரணி நடத்துவதையோ தடை விதிப்புக்கு ஒரு காரணமாக மத்திய அரசு அறிவித்திருப்பது சட்டப்படி செல்லாது. சுதந்திரத் தமிழ் ஈழத்தின் கடந்த கால வரலாற்றை இந்தத் தீர்ப்பாயத்தில் பதிவு செய்கிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்கள் தங்களுக்கு என்று சுதந்திரமான அரசு அமைத்து வாழ்ந்தனர். சிங்களர் அரசு வேறு; தமிழர் அரசு வேறு. இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் தான் அந்த பூமியின் பூர்வீகக் குடிமக்கள் என்ற வரலாற்று உண்மையை  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், 1984 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் திட்டவட்டமாகச் சொன்னார். அதுதான் நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் மாநிலங்கள் அவையில் ஆற்றிய கடைசி உரை ஆகும். எனது கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது ஆற்றிய உரை ஆகும்.

இலங்கைத் தீவில் போர்த்துக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், பிரித்தானியர்களும் நுழைந்தனர். தொடக்கத்தில் தமிழ் மன்னர்கள் சில போர்களில் வென்றனர். பின்னர், சரியான ஆயுத பலம் இல்லாததால் தோற்றனர். பிரித்தானியர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக தமிழர்களையும், சிங்களவர்களையும் ஒரே நிர்வாக நுகத்தடியில் பூட்டினர். 1948 பிப்ரவரி 4- இல் இலங்கை சுதந்திரம் அடைந்த போது, சிங்களவர்களோடு சரிசமமான உரிமையுடன் வாழலாம் என்ற தமிழர்களின் நம்பிக்கையைச் சிங்கள அரசின் அராஜகமும் அடக்குமுறையும் நாசமாக்கியது. இலங்கைத் தீவில் இருவகையான தமிழர்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் பூர்வீகக் குடிமக்கள். இன்னொரு பிரிவினர் 18-ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து சென்று அங்கு தோட்டத் தொழில் செய்த இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஆவார்கள். 

நூறாண்டுகளுக்கு மேல் அந்த மண்ணைத் தங்கள் உழைப்பால் வளப்படுத்தி இருந்தபோதிலும், 10 இலட்சம் தமிழர்களின் குடி உரிமையை சிங்கள அரசு பறித்தது.பூர்வீகத் தமிழர்கள் உரிமைக்குப் போராடியபோது, போலீஸ், இராணுவத்தின் கொடிய அடக்குமுறை அவர்கள் மீது பாய்ந்தது. அவர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தைத் துப்பாக்கி முனையில் நசுக்கி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவித்தது. சிங்கள அரசோடு தமிழர்கள் போட்ட ஒப்பந்தங்களைக் கிழித்துக் குப்பையில் போட்டது. 1976 மே 14 இல் ஈழத்துக் காந்தி என்று போற்றப்பட்ட தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்கள், அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் வட்டுக்கோட்டையில் ஒன்றாகக் கூட்டி, சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனம் செய்தார். அதில், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள் மட்டும்தான் சுதந்திரத் தமிழ் ஈழம் என்று அறிவிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தை இந்தத் தீர்ப்பாயத்தித்தில் ஆவணம் ஆக்கி உள்ளேன்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 27-ஆம் தேதி ஆற்றிய மாவீரர் நாள் உரைகளை இங்கு ஆவணம் ஆக்கியுள்ளேன். அதில் தமிழ் ஈழத்தின் எல்லைகளை அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஒரு அங்குல மண்ணைக் கூட தமிழ் ஈழத்தில் சேர்த்துக் குறிப்பிடவில்லை.

மாவீரர் நாள் உரை மேடையில் பிரபாகரன் அவர்களின் பின்னணியில் தமிழ் ஈழ வரைபடம் வைக்கப்பட்டு உள்ளது. அதில் தீவின் வடக்கு-கிழக்கு மாகாணம் தான் இருக்கிறது. நான் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் அது இடம் பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை தொடங்கியவர்களுள் ஒருவரான கிட்டு அவர்கள், 1990 இல், ஜூரிச்சில் மாவீரர் நாள் உரையின்போது, இங்கிலாந்து நாட்டு நிருபர் ஒருவர், தமிழ் ஈழத்தின் எல்லைகள் எவை என்று கேட்டார். இலங்கைத் தீவில் எங்கெல்லாம் குண்டு வீசப்பட்டிருக்கிறதோ, எங்கெல்லாம் தமிழ் மக்கள் இரத்தம் சிந்தினார்களோ அந்தப் பகுதிகள் தான் தமிழ் ஈழம் என்றார். அதனையும் ஆவணம் ஆக்கியுள்ளேன்.

விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கடந்த தீர்ப்பாயம் 2010 நவம்பர் 12 இல் உறுதி செய்தபின், அதனை எதிர்த்து டிசம்பர் 8 இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனு, தலைமை நீதிபதி அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் நீதியரசர் திலிபி தர்மாராவ் அவர்கள்அமர்வில் விசாரணை நடைபெற்று, வாதங்கள் முடிவுற்று தீர்ப்பு நிலுவையில் உள்ளது. எனவே இந்தத் தீர்ப்பாயம், மத்திய அரசு புலிகளுக்கு விதித்த தடையைத் தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.

இதன் பிறகு, மத்திய அரசு வழக்கறிஞர் சாண்டியாக் அவர்களுக்கும், வைகோ அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நேர்ந்தது. ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகள் ஏன் இங்கு ஆஜராகவில்லை என்று சாண்டியாக் கேட்டார். ஏழு வல்லரசுகள் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து, இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்கக் காரணம் ஆயின. புலிகள் இந்திய எல்லைக்குள் வந்தாலே கைது செய்வார்கள். அதனால்தான் விடுதலைப் புலிகளுக்காக நான் வாதாடுகிறேன்.

பின்னர் சாண்டியாக், இந்திய நாட்டுக்கு அண்மையில் வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிர்ப்புக் காட்டினார்கள். இதற்கு எல்லாம் புலிகள் இயக்கம்தான் காரணம் என்றபோது, இடைமறித்து வைகோ “தமிழர்களைக் கொன்று குவித்த இராஜபக்சேயின் கரங்களில் ஈழத் தமிழர்கள் இரத்தம் அல்லவா படிந்திருந்தது, அந்த கொலைகாரனை எதிர்ப்பதுதானே நியாயம்” என்றார்.

உடனே நீதியரசர் வி.கே.ஜெயின் அவர்கள் ஏராளமான ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு இலங்கை அதிபர் இராஜபக்சேதான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றார்.

பின்னர் சாண்டியாக் கூறும்போது, இந்திய ஒருமைப்பாட்டுக்கே புலிகள் ஆதரவுப் போக்கால் ஆபத்து இருக்கிறது என்றார்.

அதற்கு மறுமொழியாக இந்தியாவில் ஜனநாயக உரிமைகளுக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தில்தான் புலிகள் அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று வைகோ கூறினார். விசாரணை முடிந்தது.

இந்த விசாரணையில் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன், கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர்கள் ஆசைத்தம்பி, ஆனந்தசெல்வம் உடன் இருந்தனர். இன்றைய விசாரணையின்போது ஏராளமான வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். அனைவரும் வைகோவைப் பாராட்டினர். மத்திய அரசு உளவுத்துறை இயக்குனரும் பாராட்டினார்.

[vuukle-powerbar-top]

Recent Post