Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உறுதிமொழிகள் நிறைவேற்ற தவறின் அபாயப்பொறி நிச்சயம் - அமெரிக்கா!


இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச்மாதத்தில் நடைபெறும் ஜெனிவாத் தொடரில் அபாயப் பொறி நிச்சயம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையினை மண்டியிட வைத்த அமெரிக்கா தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கை மீது அழுத்தங்களை கொடுத்துள்ளது.
குறிப்பாக சர்வதேச சமூகத்திடம் தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை  நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத் தொடரில் அபாயப் பொறி நிச்சயம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை சர்வதேச சமூகத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை நிறை வேற்றாமல் ஜனநாயக விரோத செயல்களில் இலங்கை அரசு தொடர்ந்தும் ஈடுபடுமானால் எதிர்வரும் மார்ச் மாத ஜெனிவா அமர்வில் இலங்கை பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிவருமென பல தரப்பினராலும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து நேற்று ஜெனிவாவில் ஒன்றுகூடிய முக்கிய நாடுகளின் இராஜதந்திரிகள் இலங்கை நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளின் அமுலாக்கம் மனித உரிமைகளின் மேம்பாடு என்பன குறித்து சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றாத சூழ்நிலையில் மீளாய்வுக்கூட்டம் ஐ.நாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் நீதித்துறையில் இலங்கை அரசு தலையிட்டிருப்பது மோசமான ஒரு பாதையை காட்டி நிற்கின்றது என இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி இராஜதந்திரிகள் மட்டக் கூட்டத்தில் என்ன தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. 'நீதித்துறையின் சுயாதீனத் தன்மையில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் குறித்து மேற்குலக நாடுகள் கண்டுகொள்ளாமல் விடப்போவதில்லை. இலங்கை அரசு நீதித்துறையில் கைவைத்திருப்பதை அழிவு ஒன்றுக்கான ஆரம்பம் என்பதை மட்டும் குறிப்பிட்டு வைக்க விரும்புகிறோம் எனவும் அந்த இராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்ட சுவிட்சர்லாந்து அரசின் இராஜதந்திரி ஒருவர் இலங்கையில் நல்லாட்சி ஒன்று ஏற்படுவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க சர்வதேச சமூகம் முயற்சிக்கும்போது அதை நாட்டுக்கு எதிரான சதி என்று கூறி இலங்கை ஆட்சியாளர்கள் மலினப்படுத்துவது கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post