நீலம் புயலால் திருமலையில் பலத்த மழை பெய்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருமலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பக்தர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
‘நீலம் புயல்’ சின்னம் கரையை கடந்து ஆந்திராவை நோக்கி சென்றதால் சித்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. திருப்பதி, திருமலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே வெள்ளம் ஏற்பட்டு, குளம்போல் காட்சி அளித்தது.
கோவிலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் திருமலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு வரும் மலைப்பாதையிலும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் செல்லும் மலைப்பாதையிலும் ஏராளமான மரங்கள் விழுந்து கிடந்தன. 2–வது மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இரு மலைப்பாதைகளிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பதி கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி நாகசிவுடு, சாலை பணியாளர்களுடன் சென்று நேற்று காலை இரு மலைப்பாதைகளிலும் விழுந்து கிடந்த மரங்கள், சிறு சிறு பாறைகளை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினார். அதேபோல் தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு மற்றும் அதிகாரிகள் மலைப்பாதைகளில் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு பாறைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். பிறகு, வாகன போக்குவரத்து சீராக இயங்கின.
சித்தூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை ஆய்வு செய்வதற்காக முன்னாள் சித்தூர் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சித்தூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணம் வழங்க ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
கன மழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். எப்போதும் அலிபிரி மலைப்பாதை வழியாக 30 ஆயிரத்துக்கும் குறையாமல் பக்தர்கள் நடந்து வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால், மழை காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 13 ஆயிரத்து 131 பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். 22 ஆயிரத்து 220 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 32 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டதால் கோவில் நிர்வாகம் சார்பில் லகு தரிசனம் (அருகில் நின்று தரிசனம் செய்தல்) ஏற்பாடு செய்யப்பட்டது.