Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தூய தமிழ் தந்தவர், தனித் தமிழ் இயக்கம் கண்டவர் பரிதிமாற்கலைஞர்


பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் | 2.11.1903|| ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 'சூரிய நாராயண சாஸ்திரி' எனும் வடமொழிப் பெயர் நீக்கி 'பரிதிமாற்கலைஞர்' என்று தனித் தமிழில் சூட்டிய பெருமகனார். உயர்தனிச்செம்மொழி தமிழென்றும் வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர். 

கல்வெட்டு அறிஞரும், முன்னாள் தொல்லியல் துறை இயக்குனருமான நாகசாமி எனும் ஆரியஅடிவருடி ஆரியராலும், அவர்தம் சமஸ்கிருதத்தாலுமே தமிழ் தழைத்ததென்று கூசாமல் புளுகி வருகிறார். ஆரியகுலத்தில் பிறந்தாலும் தமிழராய் தமிழுக்காய் வாழ்ந்து மடிந்திட்ட பரிதிமாற் கலைஞர் அவர்தம் எழுதிய 'தமிழ்மொழி வரலாறு' நூலில், "ஆரியர்கள் தமிழரிடமிருந்து பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்து தமிழர் அறியும் முன்னரே அவற்றை தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டிவிட்டனர். தமிழருக்கு ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க!" என்று குறிப்பிட்டுள்ளார். வடமொழிக்கு வாதாடும் 'நரகல்சாமிகள்' பரிதிமாற் கலைஞரின் கூற்றைப் படித்து இனிமேலாவது திருந்தட்டும்!  

நன்றி : கதிர் நிலவன்

---------------------------------------------------------------------------------------------------
பரிதிமாற் கலைஞர் வாழ்க்கைக் குறிப்பு :

பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் கோவிந்த சிவன் --லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார்.வடமொழியை தந்தையாரிடமும் ,தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார் . இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். 

தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.கலாவதி (1898),ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி,ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் . இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்: 

 “என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான். ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே."

தமிழைக் காத்த பெருந்தகையை அவரது நினைவு நாளில் போற்றுவோம் . 
[vuukle-powerbar-top]

Recent Post