சென்னையை கடந்த ‘நீலம்’ புயல் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்து விட்டது என்றும், இதன் காரணமாக வட தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்களில் ஒருவரான எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தை நோக்கி வந்த நீலம் புயல் நேற்று மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. பின்னர், மேற்கு மற்றும் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா மாநிலம் ராயல்சீமா – அனந்தபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உள்ள ஈரமான காற்றை ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை உள்ளிட்ட ஒருசில நகரங்களிலும் மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக ஏற்காட்டில் 24 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 20 செ.மீ. மழையும், வந்தவாசியில் 19 செ.மீ. மழையும், திருக்கோவிலூரில் 14 செ.மீ. மழையும், வானூர், திண்டிவனத்தில் தலா 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ராயல்சீமா – அனந்தபுரம் இடையே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது படிப்படியாக குறைந்து மறைந்துவிடும். அதனால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.