கரையைக்கடந்த நீலம் புயல் வலுவிழந்து கர்நாடகா மற்றும் ஆந்திராவையொட்டி சென்றது. தமிழ்நாட்டில் இதுவரை 42 சதவீதமழை கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
நீலம் புயல், சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக்கடந்தது. அதனால் சென்னை முதல் கடலூர் வரை அதிக வேகத்தில் காற்று வீசியது. ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன.
லட்சக்கணக்கான மரக்கிளைகள் முறிந்துவிழுந்தன. கரையைக்கடந்த புயல், புயல் சின்னமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறைந்து இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறி கர்நாடகா மற்றும் ஆந்திரா அருகே சென்று உள்ளது.
இது பற்றி சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
கரையைக்கடந்த நீலம் புயல், குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலையாக மாறி, கர்நாடகா மற்றும் ஆந்திராவையொட்டி உள்ளது. அது அப்படியே தரையில் வலுஇழக்க வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் அநேக இடங்களில் கனமழைபெய்யும்.
கேரளாவிலும் அநேக இடங்களில் மழைபெய்யும். தமிழ்நாட்டிலும்,புதுச்சேரியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் 1–ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31–ந்தேதி வரை சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 18 செ.மீ. ஆனால் இந்த வருடம் அதாவது கடந்த(அக்டோபர்) மாதத்தில் 25 செ.மீ.மழைபெய்துள்ளது.
இது 42 சதவீதம் கூடுதல் மழைஆகும். அதுபோல தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி,மதுரை, நீலகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர்,தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழை பெய்துள்ளது.
மற்றபடி சென்னை உள்பட 24 மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், நெல்லை, தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மிக அதிக மழைபெய்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலத்தில் இன்னும் 2 மாதங்கள் உள்ளன. அதுபோல பெய்யவேண்டிய மழையின்அளவும் அதிகதேவை உள்ளது.காரணம் இன்னும் அணைகள், ஏரிகள் நிரம்பவில்லை.