உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
நிறைவு நாளான நேற்று, அந்த இயக்கத்தின் பொது செயலாளர் சுரேஷ் ஜோஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூடங்குளம் அணுஉலை போன்ற திட்டங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியமானது என்று கூறிய அவர், அதே சமயம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக நிதின் கட்கரியை மீண்டும் தேர்வு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்த கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய சுரேஷ் ஜோஷி, அதில், தங்கள் இயக்கத்திற்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்தார்.