ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வீடியோ ஆதாரங்களை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை முன்னாள் உளவு துறை தலைவரும் தற்போதைய மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே. நாராயணன் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ள எம்.கே. நாராயணனிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
தனது புத்தகத்தின் விற்பனையை அதிகரிப்பதை மனதில் கொண்டே ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரி ரகோத்தமன் இவ்வாறு கூறியிருப்பதாகவும் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிந்து விட்டன என்றும் அவ்வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்கள் எதையும் மறைக்கவில்லை என்றும் இவ்வழக்கு குறித்து புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் எம்.கே. நாராயணன் கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை முன்னாள் உளவு துறை தலைவர் எம்.கே. நாராயணன் மறைத்து விட்டதாக, கொலை வழக்கை விசாரித்த தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தான் எழுதியிருக்கும் புத்தகத்திலும் இதை குறிப்பிட்டுள்ளதாகவும் ரகோத்தமன் கூறியிருந்தார்.