வேலூர் பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்து உள்ளது. இதனை மேயர், கமிஷனர் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
வேலூர் பாலாற்றில் கடந்த 2004–ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பிறகு பாலாறு வறண்டு விட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நீலம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக ஏரி, குளங்கள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா அருகே வேலூருக்கு பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
பள்ளிகொண்டா அருகே பேயாற்றில் மழை நீர் வந்ததால் அங்குள்ள குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. அதைத்தொடர்ந்து பள்ளிகொண்டாவில் இருந்து விரிஞ்சிபுரம் வழியாக மழைநீர் நேற்று வேலூர் வந்தது.
அதைத்தொடர்ந்து வேலூர் இறைவன்காடு அருகே கல்லாங்குப்பத்தில் உள்ள மாநகராட்சியின் நீரேற்று நிலையம் அருகே உள்ள பாலாற்றில் நேற்று பிற்பகல் 3–30 மணிக்கு தண்ணீர் வந்தது.
இதனை மேயர் கார்த்தியாயினி, ஆணையாளர் ஜானகி, பொறியாளர் தேவக்குமார், 4–வது மண்டல தலைவர் அய்யப்பன், கவுன்சிலர்கள் துரையரசன், பிச்சைமுத்து, மகாலட்சுமிபுருஷோத்தமன், நகர் நல அலுவலர் பிரியம்வதா, நகரமைப்பு அலுவலர் கண்ணன் மற்றும் பலர் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி, மலர் தூவி வரவேற்றனர்.