கடல் பாசிகளை சேகரித்து விற்கும் வயோதிகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த கொடூரம் !
அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக லூர்து சாமி என்பரை 10-09-12 அன்று காவல் துறை கைது செய்தது. இன்று வரை லூர்து சாமி வேலூர் சிறையில் இருந்து வருகிறார்.
இன்று 03-11-12 இவரின் மேல் குண்டர் சட்டதின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் மீண்டும் அடைத்துள்ளனர் காவல் துறை. லூர்து சாமிக்கு சுமார் எழுபது வயது இருக்கும் . இவர் கரை ஒதுங்கும் கடல் பாசிகளை சேகரித்து அதை விற்று பிழைப்பு நடத்துபவர். அன்றாடம் ஐம்பது அல்லது நூறு ரூபாய்க்கு மேல் இவருக்கு வருமானம் இருக்காது. ஆனாலும் இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் தானே வேலை செய்து குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். அணு உலை முற்றுகை போராட்டத்தின் போதே , இவரும் மக்களோடு கடற்கரையில் இருந்தார். ஆனால் இவர் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை . வன்முறையில் ஈடுபடும் உடல் வலிமையையும் இவருக்கு இல்லை.
இருந்தும் ஊரில் யாரவது ஒரு அப்பாவி கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் காவல்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது . அடைத்தது மட்டும்மல்லாமல் இன்று இவரின் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சி உள்ளது வேதனைக்குரிய விடயமாகும்.மனித உரிமை ஆர்வலர்கள் காவல்துரையின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். பொதுவாக குண்டர் சட்டம் வன்முறையில் ஈடுபடும் மக்கள் மீது தான் பாயும் . ஆனால் இந்திய நாட்டில் மட்டும் தான் எந்த வன்முறையிலும் ஈடுபட முடியாத வயோதிகர்கள் மீது குண்டர் சாட்டம் பாய்கிறது . இது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் ஆகும்.
லூர்து சாமியுடன் நசுரேன் என்பரின்மேலும் இன்று சட்டம் போடப்பட்டுள்ளது. அணு உலைக்கு எதிராக போராடும் இது போன்ற மண்ணின் மைந்தர்களை அரசு நசுக்க நினைப்பது மக்கள் விரோத செயலாகவே பார்க்கப்படுகிறது.