Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைப் படையினருக்கு பேரழிவுகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகள்

போரின் போது இலங்கை படையினருக்கு கணிசமான இழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படைப்பிரிவில் குறைந்தது 30 ஆட்டிலறிகள் இருந்ததாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 

“விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படைப்பிரிவில், 152 மி.மீ ஆட்டிலறிகள்- 15, 130 மி.மீ ஆட்டிலறிகள்- 11, 122 மி.மீ ஆட்லறிகள்- 03, 85 மி.மீ ஆட்டிலறி- 01 மற்றும் 120 மி.மீ மோட்டார் -01 என குறைந்தது 30 ஆட்டிலறிகள் இருந்தன. 

விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகளால் இலங்கை படையினருக்கு, குறிப்பாக வன்னிப்போர் முனையில், 2008 ,2009 காலப்பகுதியில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தினர். 

வன்னி கிழக்கில் முதல் முறையாக விடுதலைப் புலிகளிடம் இருந்து 2009 ஜனவரி 29ம் நாள் 152 மி.மீ ஆட்டிலறி ஒன்றை இலங்கைப் படையினர் கைப்பற்றினர். 

இதன் பின்னர், 152 மி.மீ, 130 மி.மீ, 122 மி.மீ, 85 மி.மீ ஆட்டிலறிகள், ஒரு 120 மி.மீ மோட்டார் என மொத்தம் 30 ஆட்டிலறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவற்றில் 5 ஆட்டிலறிகள் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கடந்த 31ம் நாள் கண்டுபிடிக்கப்பட்டன. 

போரின் போது இந்த ஆட்டிலறிகள் அனைத்தும் வன்னி மற்றும் யாழ்.போர்முனையில் புலிகளால் பயன்படுத்தப்பட்டன. 

இவற்றை விட விடுதலைப் புலிகளால் பெருந்தொகையான 60 மி.மீ மோட்டார்களும் போரில் பயன்படுத்தப்பட்டன. 

இலங்கை இராணுவம் 2008ம் ஆண்டில் 2174 அதிகாரிகள் மற்றும் படையினரையும், 2009இல் 2350 அதிகாரிகள் மற்றும் படையினரையும் இழந்துள்ளது. 

இந்தக்கால கட்டத்தில் 113 இலங்கை படையினர் காணாமற்போயுள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானவர்கள், வன்னி மற்றும் யாழ். போர்முனைகளிலேயே கொல்லப்பட்டனர். 

முன்னேறும் இலங்கைப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பெருமளவில் ஆட்டிலறிகளையும், மோட்டார்களையும் பயன்படுத்தினர். 

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான ஆயுதங்கள் வெளிநாடுகளில் வாங்கப்பட்டு, இலங்கைக்கு கடத்தி வரப்பட்டவையாகும். 

152 மி.மீ ஆட்டிலறி 20 கி.மீ வீச்செல்லை கொண்டதுடன், 75 மீற்றர் சுற்றளவுக்கு அழிவுகளை ஏற்படுத்தக் கூடியது. 

27 கி.மீ வீச்செல்லை கொண்ட 130 மி.மீ ஆட்டிலறி, விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட நீண்டதூர வீச்செல்லை கொண்ட கனரக ஆயுதமாகும். இது 50 தொடக்கம் 75 மீற்றர் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தும். 

20 கி.மீ வீச்செல்லை கொண்ட 122 மி.மீ ஆட்டிலறி 50 மீற்றர் சுற்றளவில் அழிவுகளை ஏற்படுத்தும். 

50 மீற்றர் சுற்றளவில் அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய 85 மி.மீ ஆட்டிலறி, 17 கி.மீ வீச்செல்லையைக் கொண்டது. 

120 மி.மீ மோட்டார் 7 கி.மீ வீச்செல்லையையும், 50 மீற்றர் சுற்றளவில் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. 

இலங்கை இராணுவமும் கூட 152 மி.மீ, 130 மி.மீ, 122 மி.மீ ஆட்டிலறிகளைக் கொண்டுள்ளது. 

2007 ஜுனில் கிழக்கு மாகாணத்தை இலங்கைப் படையினர் கைப்பற்றியதை அடுத்து, வன்னிப்போர் முனையில் போரைத் தொடங்கிய போது, கடுமையான ஆட்டிலறிச் சூட்டின் மூலம் புலிகள் பதிலடி கொடுத்தனர். 

வன்னி மற்றும், யாழ். போர்முனைகளில் நிலைகொண்டிருந்த படைப்பிரிவுகள் மீது விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கான ஆட்டிலறி மற்றும் மோட்டார் குண்டுகளை ஏவியிருந்தனர். 

கிழக்குப் போர் அரங்கிலும் விடுதலைப் புலிகள் ஆட்டிலறி மற்றும் மோட்டார்களை விடுதலைப் புலிகள் கணிசமானளவில் பயன்படுத்தியிருந்தனர். 

எனினும் அவர்கள் வடக்கில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டிலறிகளுடன், கிழக்கில் நிறுத்தியிருந்த ஆட்டிலறிகளின் அளவு குறைவானது. 

கிழக்கு மாகாணத்தில் புலிகள் சில ஆட்டிலறிகளையே நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால் வடக்கில் அவர்கள் மிகப்பெரிய சுடுபல சக்தியைக் கொண்டிருந்தனர். 

கிழக்கு மாகாணத்தில் புலிகள் ஆட்டிலறிகளை குறைந்தளவில் பயன்படுத்திய காரணத்தினால், இலங்கை இராணுவத்துக்கு ஒப்பீட்டளவில் குறைந்தளவு இழப்புகளே ஏற்பட்டன. 

கிழக்கில் 2006இல் 784 படையினரும், 2007இல் 571 படையினரும் கொல்லப்பட்டனர். 40 படையினர் காணாமற்போயினர். 

நான்காவது கட்ட ஈழப்போரில், உடல்உறுப்புகளை இழந்த 15,788 இலங்கைப்  படையினரில், கணிசமான எண்ணிக்கையானோர், புலிகளின் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களில் படுகாயமடைந்தனர். 

விடுதலைப் புலிகள் காலத்துக்குக் காலம் கிடைத்த ஆட்டிலறிகள் மற்றும் மோட்டார்களைக் கொண்டு தமது பீரங்கிப் படைப்பிரிவை வளர்த்தெடுத்திருந்தனர். 

இலங்கை இராணுவம் பல்குழல் பீரங்கிகளை பாகிஸ்தான் மற்றும் செக் குடியரசிடம் இருந்து வாங்குவதற்கு முன்னரே, விடுதலைப் புலிகள் 1990களின் இறுதியில் சிறிய பல்குழல் பீரங்கிகளை பெற்றுக் கொண்டு விட்டனர் என்று புலனாய்வு வட்டாரங்கள் கூறுகின்றன. 

விடுதலைப் புலிகள் இரண்டு வகையான மோட்டார்களையும் தயாரித்து அரசபடையினருக்கு எதிராகப் பயன்படுத்தியிருந்தனர். 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒட்டுமொத்த போரிலும், கொல்லப்பட்ட 23,323 இலங்கைப்  படையினரில் குறிப்பிடத்தக்க வீதமானோர், விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி, மோட்டார் தாக்குதல்களாலேயே கொல்லப்பட்டனர்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post