இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் 19வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது வர்த்தக மற்றும் முதலீட்டு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாகவும், அடுத்த இந்திய இலங்கை கூட்டுக்குழுக் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் பிஸ்னஸ் லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்தியாவின் திட்டங்கள் குறித்தும், இந்தியாவில் இலங்கை மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இருநாட்டு மீனவர் அமைப்புகளினதும் கூட்டத்தை முன்கூட்டியே கூட்டுவதற்கு இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர், சல்மான் குர்சித், இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையின் ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா இருப்பதாகவும், அது தமது நாட்டில் தவிர்க்க முடியாத பங்கை வகிப்பதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.